2013-01-07 15:38:13

திருத்தந்தை : ஆயர்கள் இயேசு கிறிஸ்துவின் வழியைப் பிறருக்குக் காட்ட வேண்டும்


சன.07,20113. இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருக்காட்சித் திருவிழாத் திருப்பலியை நிகழ்த்தி, நான்கு பேரை ஆயர்களாகத் திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் அந்தரங்கச் செயலர் மற்றும் பாப்பிறை இல்ல நிர்வாகத்தின் தலைவரான பேரருள்திரு Georg Gaenswein, கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் செயலர் பேரருள்திரு Vincenzo Zani, நிக்கராகுவா நாட்டுக்கானப் பதிய திருப்பீடத் தூதர் பேரருள்திரு Fortunatus Nwachukwu, திருப்பீடத்தின் தூதரகப் பணிகளில் தூதராகப் பணியாற்றும் பேரருள்திரு Nicolas Thevenin ஆகிய நால்வரையும் ஆயர்கள் மற்றும் பேராயர்களாகத் திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை.
இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இந்த மூன்று கீழ்த்திசை ஞானிகளின் பண்புகள், ஓர் உண்மையான ஆயரின் பண்பை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன என்று கூறினார்.
விண்மீனால் வழிநடத்தப்பட்டு பெத்லகேம் குடிலை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்த இந்த மூன்று ஞானிகள், இயேசு கிறிஸ்துவை நோக்கிய நாடுகளின் திருப்பயணத்தின் மற்றும் மனித வரலாறு முழுவதும் வீசிக்கொண்டிருக்கும் பெரிய ஊர்வலத்தின் தொடக்கமாக இருக்கிறார்கள் என்றும் கூறினார் அவர்.
ஓர் ஆயர் இந்தப் பயணத்தில் மற்றவர்களோடு சேர்ந்து நடப்பவர் மட்டுமல்லாமல், பிறருக்கு முன்னே சென்று அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் வழியைக் காட்ட வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இந்த மூன்று ஞானிகள் போன்று திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர்களும் துணிச்சலானவர்களாய் இருக்க வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, மனிதர்மீது கடவுள் கொண்டிருக்கும் அக்கறையாக வாழும் ஒரு மனிதரே ஆயர் என்றும், இதற்காகவே ஆயர் ஓய்வின்றிச் செயல்பட்டு, உலகில் விண்மீன்கள் போன்று இயேசுவின் வாழ்வுக்குச் சாட்சிகளாக வாழ வேண்டுமென்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.