2013-01-07 15:52:45

கற்றனைத்தூறும்... தங்கத்தின் வரலாறு


என் பொன்னே, தங்கமே என்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் செல்லமாய் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு மதிப்புமிக்க தங்கம், ஒரு குடும்பத்தின் செல்வநிலையை மதிப்பிட மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகிக்கிறது.
தங்கம் அல்லது பொன் (Gold) என்பது, கி.மு 3,600ம் ஆண்டு முதல் இன்றுவரை, உலகின் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகித்து வருகிறது. கி.மு.3,600ல் எகிப்தியப் பொற்கொல்லர்கள் முதன் முதலில் தங்கத்தை உருக்கி ஊதுகுழல்கள் செய்தனர். கி.மு.2,600ல் தங்க நகைகள் செய்யப்பட்டன. கி.மு.595 முதல் கிரேக்கத்தின் லிடியாவின் அரசராக இருந்த Croesus என்பவர், தங்கத்தை உருக்கிச் சுத்தம் செய்யும் தொழில்நுட்பங்களை வளர்த்தார். இதன் பயனாக கி.மு.564ல் முதல் அனைத்துலக தங்க நாணயம் உருவாக்கப்பட்டது. கி.பி. 1848ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டு கலிஃபோர்னியாவிலும், 1885ம் ஆண்டில் தென்னாப்ரிக்காவிலும் தங்கச் சுரங்கங்களிலிருந்து தங்கம் வெட்டும் பணி தொடங்கியது. இன்று உலகில் கிடைக்கும் தங்கத்தில் ஏறக்குறைய 50 விழுக்காடு தென்னாப்ரிக்காவில் கிடைக்கிறது. உலகிலுள்ள ஆழமானத் தங்கச் சுரங்கங்களில் இரண்டு தென்னாப்ரிக்காவில் உள்ளன. Boksburg லுள்ள East Rand சுரங்கம் 3,585மீட்டர் ஆழத்தையும், Carletonvilleலுள்ள TauTona சுரங்கம் 3,900 மீட்டருக்கு மேற்பட்ட ஆழத்தையும் கொண்டுள்ளன. இந்த ஆழத்தில் வெப்பநிலை 60 செல்சியுஸ் டிகிரி ஆகும். மேலும், கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா இந்தியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்காவிலும், தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகொடை எனுமிடத்தில் களனி ஆற்றுப் பகுதியில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. தங்கம் பெரும்பாலும் பூமிக்கு அடியில் ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்து வேதியியல் முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றது. அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. இது வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும். காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே எப்போதும் பள பளப்பாகவே இருக்கும். ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த கலவையில் மட்டுமே தங்கம் கரையும். இது நீரைப்போல் ஏறக்குறைய 19 மடங்கு எடையுள்ளது.
2011ம் ஆண்டில் அனைத்துலக தங்க அமைப்பு வெளியிட்ட தகவலின்படி மனித வரலாற்றில் 1 இலட்சத்து 71 ஆயிரத்து 300 டன்கள் தங்கம் சுரங்களிலிருந்து வெட்டப்பட்டதாகத் தெரிகிறது. உலகில் வெட்டப்படும் தங்கத்தில் ஏறக்குறைய 50விழுக்காடு நகைகளாகவும், 40 விழுக்காடு முதலீடுகளாகவும், 10 விழுக்காடு தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.
தங்கம் ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாட்டின் பணமதிப்பிலும் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பணமதிப்பைக் குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி(ரிசர்வ் வங்கி)யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு அந்த நாட்டு அரசு, பணமதிப்பை அல்லது பண நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்தச் சனவரி 3ம் தேதி செய்தியின்படி, இந்திய மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க தங்க இறக்குமதியை கணிசமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கு இடையே இடைவெளி இருப்பதால் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது 2,225 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. இதனை பாதி அளவாக குறைத்தால் அன்னியச் செலாவணியின் இருப்பு உயர வாய்ப்பு ஏற்படும் என்றும் ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.