2013-01-05 14:18:37

சனவரி 06, திருக்காட்சிப் பெருவிழா: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 மகன் தந்தையிடம் புதிர் கேள்வியொன்றைத் தொடுத்தான். “ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?” என்று கேட்டான். “இது என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும்” என்று பெருமையாகச் சொன்னார் தந்தை.
“அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்து கொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?” என்று கேள்வியை மீண்டும் சொன்னான்.
அப்பா எதையோ புரிந்து கொண்டவர் போல், “ஓ, புரிகிறது... கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்றவைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்” என்று சொன்னார். அவரது அறிவுத் திறனை அவரே மெச்சிக் கொண்டதைப்போல் புன்னகை பூத்தார்.
“அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள்” என்று மகன் தலையில் அடித்துக்கொண்டு, விளக்கத் தொடங்கினான்: “மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவைகளில் ஒன்று குளத்திற்குள் குதிக்கத் தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை” என்று விளக்கம் கொடுத்தான். தந்தையின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. இலேசாகக் கொஞ்சம் அசடும் வழிந்தது.

சில நாட்களுக்கு முன் நாம் ஆங்கிலப் புத்தாண்டு நாளைக் கொண்டாடினோம். ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம் புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுக்கிறோம், திட்டங்கள் தீட்டுகிறோம். தீர்மானங்களும், திட்டங்களும் மனதளவில் நின்றுவிட்டால் பயனில்லை. அவை செயல்வடிவம் பெறவேண்டும்.
தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவேண்டும் என்ற பாடத்தை இன்றையத் திருக்காட்சிப் பெருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது. மூன்று இராசாக்கள், மூன்று அரசர்கள், மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இன்றைய விழா நாயகர்கள் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். எந்தத் தடை வந்தாலும், எடுத்தத் தீர்மானத்தில் உறுதியாய் இருந்த இவர்களை, தீர்மானங்களின் பாதுகாவலர்கள் எனக் கொண்டாடலாம்.
மூன்று ஞானிகளும் ஒரு விண்மீனைக் கண்டதால், கடினமானதொரு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் கண்ட அதே விண்மீனை இன்னும் பல்லாயிரம் பேர் பார்த்திருப்பர். ஆனால், ஏனையோருக்கு அது வெறும் விண்மீனாய் பளிச்சிட்டது, நமது புத்தாண்டுத் தீர்மானங்களைப் போல... அவ்வளவுதான்... மூன்று ஞானிகளுக்கோ அந்த விண்மீன் ஓர் அழைப்பாகத் தெரிந்தது. அவர்கள் அந்த விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். அவர்களது தீர்மானத்தைக் கேட்ட அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர்மக்கள் அவர்களைக் கேள்விக்குறியுடன் பார்த்திருக்கலாம். கேலி செய்திருக்கலாம். அவர்களது கேள்விகளும், கேலிகளும் இம்மூன்று ஞானிகளின் உறுதியைக் குறைக்கவில்லை. விண்மீனைத் தொடர்ந்தனர்.

விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் இன்றைய நற்செய்தி சொல்கிறது. வாழ்க்கையில் எந்த விண்மீன்களின் ஒளியில் நாம் நடக்கிறோம் என்றும், இறைவனைச் சந்தித்தப்பின் நம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பது பற்றியும் சிந்திக்கலாம்.
விண்மீன்கள் என்றதும் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற சொற்களும், இச்சொற்களுடன் தொடர்புகொண்ட பல எண்ணங்களும் உள்ளத்தில் எழுகின்றன. திரைப்படம், விளையாட்டு போன்ற துறைகள் உருவாக்கும் செயற்கையான 'ஸ்டார்களும்' 'சூப்பர் ஸ்டார்களும்' எவ்வளவு தூரம் இளையோர் வாழ்வை ஆக்கிரமித்துள்ளன என்பதை எண்ணிப்பார்க்க இது நல்லதொரு தருணம். இந்த ‘ஸ்டார்களை’ச் சுற்றி வட்டமிட்டு, வாழ்வை வீணாக்கும் விட்டில் பூச்சிகளை நினைத்தால், வேதனையாய் இருக்கிறது.

வானில் தோன்றும் விண்மீன்களைத் தொடர்வது எளிதான செயல் அல்ல. விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். பயண வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. அதுவும் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே ஒரு சிறு விண்மீனை மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில் மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து... எத்தனை எத்தனை இரவுகள் அவர்கள் நடந்திருக்க வேண்டும்? இத்தனை இடர்கள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

இந்த மூன்று ஞானிகளை, பாரம்பரியமாக, மூன்று அரசர்கள் என்றே அழைத்து வந்துள்ளோம். இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இன்றைய நற்செய்தி (மத்தேயு 2:1-12) நான்கு அரசர்களைப் பற்றி கூறுகிறது. ஆம், இந்த மூன்று அரசர்களுடன் நாம் ஏரோது அரசனையும் இணைத்துப் பார்க்கிறோம்.
இவர்கள் நால்வரும் இயேசுவைத் தேடினார்கள். விண்மீன் வழிநடத்த, பல நூறு மைல்கள் பயணம் செய்த மூன்று அரசர்கள், எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இயேசுவை உண்மையிலேயேத் தேடினர். இயேசுவைக் கண்டதும் தங்களையே அர்ப்பணம் செய்ததன் அடையாளமாக, காணிக்கைகளை அக்குழந்தையின் காலடியில் சமர்ப்பித்தனர்... அதன்பின், வேறுவழியில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர். இந்த நிகழ்வுக்குப் பின், அவர்களைப் பற்றி விவிலியத்தில் எந்தத் தகவலும் இல்லை. திரும்பிச்சென்ற வழியில், ஏதோ காற்றோடு காற்றாக அவர்கள் கரைந்துவிட்டதைப் போல் தெரிகிறது.

இறைவனைத் தேடி, கண்டுபிடித்து, அவரை உண்மையாகவேச் சந்தித்த பலரது நிலை இதுதான். எடுத்துக்காட்டாக, எருசலேம் கோவிலில் குழந்தை இயேசுவைக் கையிலேந்திய சீமோன் இயேசுவைக் கண்டதால் உண்டான மகிழ்வுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற விரும்பினார். (லூக்கா 2:25-32) இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் நிலையும் (யோவான் 3:30) “இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலாத்தியர் 2:20) என்று முழங்கிய புனித பவுலின் நிலையும் இதைப் போன்றதே. இறைவனை உண்மையிலேயேக் கண்டு, நிறைவடைந்த அனைவருமே தங்கள் வாழ்வை அவரிடம் அர்ப்பணித்துவிட்டு மறைவதையே விரும்புவர். இந்த அழகியப் பாடத்தை மூன்று அரசர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

இதற்கு நேர்மாறாக, நான்காவது அரசன் ஏரோதுவின் செயல்பாடுகள் அமைந்தன. அவனும் இயேசுவைத் தேடினான். எதற்காக? அவரைக் கொல்வதற்காக. அவரைக் கண்டு வணங்கப் போவதாக மூன்று ஞானிகளிடம் பொய் சொன்னான். அவனது தேடுதல் வெறியாக மாறி, பல நூறு பச்சிளம் குழந்தைகளை அவன் கொன்று குவித்தான்.
இயேசுவைக் கண்ட மகிழ்வில் மறைந்துபோன மூன்று அரசர்களுக்கு நேர்மாறாக, ஏரோது இயேசுவை மறைக்க, அழிக்க வழி தேடினான். காரணம் என்ன? அவன் இயேசுவைவிட முக்கியமான ஒரு கடவுளைக் கண்டுவிட்டதாக நினைத்தான். அவனைப் பொருத்தவரை, அவனது அரியணையே அவன் வணங்கிய கடவுள். அரியணை என்ற இந்தக் கடவுளுக்கு, அவன் தன் மனைவியரையும், பிள்ளைகளையும் பலி கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. இயேசுவையும் பலி கொடுக்க முயன்றான். ஏரோதின் வாழ்க்கை சொல்லித்தரும் எச்சரிக்கைப் பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

மூன்று ஞானிகளின் கதை வேறு பல அழகான கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது. அவைகளில் ஒன்று Henry Van Dyke எழுதிய “The Other Wise Man” மற்றுமொரு ஞானி என்ற கதை. இந்தக் கதையில் வரும் ஞானியின் பெயர் Artaban. தான் சந்திக்கச் செல்லும் மன்னனுக்குப் பரிசுகள் ஏந்திச்செல்ல நினைத்த Artaban, தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்.
அவர் செல்லும் வழியில், நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு யூதரைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டுச் செல்ல நினைத்தார். ஆனால் மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு நோயாளிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். இதனால், அவரது பயணம் கொஞ்சம் தாமதமானது.
அவர் பெத்லகேமை அடைந்தபோது, மற்ற மூன்று ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை அறிந்தார். அதைவிட, பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற செய்திதான். Artaban எகிப்து நோக்கி தன் பயணத்தைத் துவக்கியபோது, மன்னன் ஏரோதின் படைவீரர்கள் அங்குள்ள குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம் இருந்த வைரத்தைப் படைத் தளபதியிடம் கொடுத்து, ஒரு குழந்தையை அவர் காப்பாற்றினார்.
பின்னர், Artaban 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி வந்தார். சென்ற இடமெல்லாம், தான்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிகள் செய்து வந்தார். இறுதியில் அவர் எருசலேம் வந்து சேர்ந்தார். அங்கு, இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு ஏற்கனவே கல்வாரிக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கேள்விப்பட்டார். தன் கையிலிருக்கும் விலையுயர்ந்த முத்தை அந்த வீரர்களிடம் கொடுத்து இயேசுவை மீட்டுவிடலாம் என்று கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில், அடிமையாக விற்பதற்கென்று ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டார். அப்பெண்ணை விடுவிக்க, தன்னிடம் இருந்த கடைசி பரிசான அந்த முத்தையும் கொடுத்தார்.
அந்நேரத்தில், திடீரென இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. Artaban தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக: "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச் செய்யும்போது, எனக்கேச் செய்தீர்." என்ற குரல் கேட்டது. இக்குரலைக் கேட்டதும், Artaban தான் தேடி வந்த அரசனைக் கண்டுகொண்ட மகிழ்வோடு, நிறைவோடு கண்களை மூடினார்.

மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கதை. விண்மீனைக் கண்டு பயணம் புறப்பட்டவர்களெல்லாம் கடவுளை நேரில் கண்டனரா? இல்லையே. எத்தனையோ பேர், கடவுளை நேரில் காணாதபோதும், அந்தக் கடவுளின் நியதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினர். இதனால், அவர்களே பலரை, கடவுளிடம் அழைத்துச்சென்ற வின்மீண்களாயினர் என்பதை Artaban புரிய வைக்கிறார்.
உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், Artabanஐப் போல், எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தீர்மானமாய் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில் நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய்த் மாறவும் தேவையான இறையருளை வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.