2013-01-05 15:09:39

இசுலாமியத் தீவிரவாதிகளின் வன்முறை குறித்து திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கவலை


சன.05,2013. இசுலாம் மதத்தைப் பின்பற்றாத மக்கள்மீது சில அரசுகள் ஷாரியா என்ற இசுலாமியச் சட்டத்தைத் திணிப்பது குறித்தும், இசுலாமியத் தீவிரவாதிகளின் வன்முறை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran.
லொசர்வாத்தோரே ரொமானோ என்ற திருப்பீடச்சார்புத் தினத்தாளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார் கர்தினால் Tauran.
இசுலாமியச் சட்டத்தை அனைவர்மீதும் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் வழிகளைத் தேடுவதற்கு அல்லது வன்முறையைப் பயன்படுத்துவதற்கு மதத்தைக் காரணம் காட்டித் தங்களது செயல்களைச் சில தடம்புரண்ட சிறுபான்மைக் குழுக்கள் நியாயப்படுத்துகின்றன, ஆனால் இச்செயல்கள் அவர்களது சமூகங்களுக்கு மட்டுமல்லாமல் முழு உலகத்துக்கே ஆபத்தாக இருக்கின்றன என்றும் கூறினார் கர்தினால்.
மதங்களுக்கு இடையே உரையாடல் இடம்பெறுவதற்கும் இச்செயல்கள் தடைகளாக உள்ளன என்றுரைத்த கர்தினால் Tauran, பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் பல கிறிஸ்தவ சமூகங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் மேற்கோள் காட்டினார்.
இந்தச் செயல்கள் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை மற்றும் இவை இசுலாத்தின் ஆன்மீக மற்றும் சமயக் கூறுகள் மறக்கப்படக் காரணமாகக்கூடும் என்றும் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran எச்சரித்தார்







All the contents on this site are copyrighted ©.