2013-01-04 14:53:17

பிறக்க அருமையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 66வது இடம்


சன.04,2013. இந்த 2013ம் ஆண்டில் மனிதர் பிறப்பதற்கு அருமையான நாடு எது என்ற ஆய்வில், இந்தியா, 66வது இடத்தையும் இலங்கை 63வது இடத்தையும் பிடித்துள்ளன. முதலிடத்தை, சுவிட்சர்லாந்தும், 75வது இடத்தை பாகிஸ்தானும் பிடித்துள்ளன.
"பிறந்தால் இந்த நாட்டில் தான் பிறக்க வேண்டும்' என்ற தலைப்பில், The Economist என்ற பன்னாட்டு நிறுவனத்தின் இணையதளம் சார்பில், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், ஆசியாவில் சிங்கப்பூரே வாழ்வதற்குச் சிறந்த இடம் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில் சீனா 49வது இடத்திலும், இரஷ்யா, 72வது இடத்திலும் பங்களாதேஷ் 77வது இடத்திலும், ஆப்ரிக்க நாடான நைஜீரியா 80வது இடத்திலும் உள்ளன.
இது போன்றதொரு ஆய்வு 1988ல் எடுக்கப்பட்ட போது, 13வது இடத்தைப் பிடித்த சுவிட்சர்லாந்து, இப்போதைய கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தை, ஆஸ்திரேலியாவும், அடுத்த இடங்களை நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.
ஆறாவது இடத்தை சிங்கப்பூரும், எட்டாவது இடத்தை நெதர்லாந்தும், ஒன்பதாவது இடத்தை கனடாவும், 10வது இடத்தை ஹாங்காங்கும் பிடித்துள்ளன.
அமெரிக்காவும், ஜெர்மனியும், 16வது இடத்தில் உள்ளன. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், ஐரோப்பிய நாடுகளான, கிரீஸ், போர்ச்சுக்கல், இஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள், இப்பட்டியலில் பின்தங்கியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.