2013-01-03 15:07:32

பாகிஸ்தானில் வன்முறைக் கலாச்சாரத்தை நீக்கும் முயற்சிகளை மேற்கொள்வதே நாட்டுக்கு நல்லது - கத்தோலிக்க அமைப்பு


சன.03,2013. சிறுபான்மையினரைக் காக்கும் முயற்சிகள் என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி, அனைவருக்கும் சம உரிமை என்ற முயற்சிகளை, பாகிஸ்தான் அரசு மேற்கொள்வது மட்டுமே நாட்டைக் காக்கும் சிறந்த வழி என்று கத்தோலிக்க அமைப்பு ஒன்று கூறியது.
பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருஅவையின் நீதி அமைதிப் பணிக்குழு அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2012ம் ஆண்டு ஐந்து கிறிஸ்தவக் கோவில்கள், மூன்று இந்து கோவில்கள் மற்றும் Ahmadi எனப்படும் ஒரு சிறுபான்மை இஸ்லாமியப் பிரிவின் தொழுகைக் கூடம் என ஒன்பது வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், சிறுபான்மையினருக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பதும், சிறுபான்மை வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவோர் கொல்லப்படுவதும் நாட்டில் அடிக்கடி நடைபெறும் போக்கு என்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.
சிறுபான்மையினரைக் காப்பதற்கு அரசு முயற்சிகள் மேற்கொள்வதற்கு மேலாக, நாட்டில் வன்முறைக் கலாச்சாரத்தை நீக்கும் முயற்சிகளை மேற்கொள்வதே நாட்டுக்கு நல்லது என்று இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.








All the contents on this site are copyrighted ©.