2013-01-03 14:16:09

கற்றனைத் தூறும்.... கலியுகம்


இக்காலத்தில் சில பிள்ளைகள் செய்யும் குறும்புகளைப் பார்த்து இது கலியுகம் என்று பாட்டித் தாத்தாக்கள் சொல்வதைக் கேட்கிறோம். அதென்ன கலியுகம்? பொதுவாக ஆண்டு, மாதம், வாரம், நாள் எனச் சொன்னால் அவை நமக்குப் புரிந்து விடுகிறது. ஏனெனில் ஆண்டு, மாதம், வாரம், நாள் என நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் யுகங்களில் நாம் வாழவில்லை. அவற்றை எப்படிப் புரிந்து கொள்வது? இதற்கு மேதாதிதி என்பவர், கிருதயுகம் 4,800 ஆண்டுகள், திரேதாயுகம் 3,600 ஆண்டுகள், துவாபரயுகம் 2,400 ஆண்டுகள், கலியுகம் 1,200 ஆண்டுகள் என விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் சாஸ்திர ரீதியாக ஆய்வுசெய்த சிலர், இந்த யுகங்களை 1,000 2,000, 3,000 4,000 என்று வகுத்துள்ளனர். ஆயினும் பரமஹம்ஸ ஸ்ரீ நாராயண்ஷட் சாஸ்திரி என்பவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நூலை வெளியிட்டார். பல ஆய்வுகள் செய்த பின்னர் இவர் எழுதியுள்ள அந்த நூலில், 1943ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று கலியுகம் முடிந்து கிருதயுகம் பிறந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார். சூரியன், சந்திரன், குரு, பூச நட்சத்திரங்கள் எல்லாம் சமகாலத்தில் ஒரே ராசியில் நுழையும்போது அல்லது சந்திரன், சூரியன், குரு ஆகிய மூன்றும் ஒரே ராசியில், ஒரே நேரத்தில் சேரும்போது கலியுகம் முடிந்து கிருதயுகம் தொடங்கும் என பாகவத சுலோகம் (12,2,24)சொல்கிறது. அந்தப் பூரணயோகம் 1943ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று வந்துவிட்டது என்கிறார் பரமஹம்ஸ ஸ்ரீ நாராயண்ஷட் சாஸ்திரி. இருந்தபோதிலும் கிருதயுகத்தின் முழுபலனும் கிடைப்பதற்கு நூறு ஆண்டுகள் ஆகுமாம். கிருதயுகத்தில் மக்களுக்கு நோய் வராது, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மக்களின் ஆயுள்காலம் 400 ஆண்டுகள், பின்னர் மறுபடியும் யுகம் மாற மாற, தர்மத்தின் அளவு குறையக் குறைய ஆயுளும் குறையுமாம். கிருதயுகத்திலே ஒரே மதம், ஒரே கடவுள் என்ற நிலைமை உலகில் வந்து விடுமாம். இவ்வாறெல்லாம் அவர் சொல்லியிருக்கிறார்.
(நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்)







All the contents on this site are copyrighted ©.