2013-01-03 15:04:15

இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal வழங்கிய புத்தாண்டு செய்தி


சன.03,2013. உலகில் அமைதியை வளர்ப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் உலக அமைதி நாள் செய்தியின் வழியாக நம்மை அழைக்கிறார் என்று எருசலேம் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் பேராயர் Fouad Twal கூறினார்.
சனவரி 1ம் தேதி கொண்டாடப்பட்ட உலக அமைதி நாளையொட்டி திருத்தந்தை வழங்கியச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு, பேராயர் Twal வழங்கிய புத்தாண்டு நாள் சிறப்புச் செய்தியில் இவ்வாறு கூறினார்.
உலகில் அமைதி குலைவதற்கு திருத்தந்தை சுட்டிக்காட்டும் காரணங்களான ஏழை, செல்வந்தர் பாகுபாடுகள், தன்னலப் போக்குகள் என்பனவற்றைத் தன் உரையில் வலியுறுத்திய பேராயர் Twal, கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் நம்மில் வளர்க்கக்கூடிய பேராசையின் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
அண்மையில் பாலஸ்தீனம் தனி நாடாக உருவானபின்னர், அதன் தலைவர் Mahmoud Abbas திருத்தந்தையைச் சந்தித்தபோது, பாலஸ்தீனம் பெற்றுள்ள தனி நாடு என்ற நிலை குறித்து திருத்தந்தை மிகுந்த மகிழ்வு கொண்டார் என்பதையும் பேராயர் Twal தன் புத்தாண்டு செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது, அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரின் தலையாயக் கடமை என்பதையும் எருசலேம் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.