2013-01-02 15:38:41

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் இந்தியர்களைத் தலைகுனிவுக்கு உள்ளாக்குகிறது - அனைத்திந்திய கிறிஸ்தவ கழகம்


சன.02,2013. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரைப் பற்றிய விவரங்களை அரசு சேகரித்து, உடனுக்குடன் அவற்றின் மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய கிறிஸ்தவக் கழகத்தின் தலைவர் ஜோசப் டிசூசா கூறினார்.
பெண்களின் பாதுகாப்பு என்ற அம்சத்தில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதை ஐ.நா. அவை அறிவித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அனைத்திந்திய கிறிஸ்தவ கழகம், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் இந்தியர்களைத் தலைகுனிவுக்கு உள்ளாக்குகிறது என்று கூறியுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகம் இலக்காவது தலித் பெண்கள், மற்றும் பழங்குடி பெண்கள் என்பதை வலியுறுத்திக் கூறும் இவ்வறிக்கை, குடும்பங்களுக்குள் நடைபெறும் வன்முறைகள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்களின்போதும், கந்தமால் கலவரங்களின்போதும் குழுக்களாகப் பாலியல் வன்கொடுமைகளைச் செய்தவர்கள் இன்னும் தண்டிக்கப்படாமல் இருப்பது பெரும் அநீதி என்று அனைத்திந்திய கிறிஸ்தவக் கழகத்தின் பொதுச்செயலர் ஜான் தயாள் கூறினார்.
புது டில்லியில் நடைபெற்ற இவ்வன்கொடுமையைப் பற்றி கருத்து வெளியிட்ட தலாய் லாமா, அகிம்சைக்குப் புகழ்பெற்ற இந்தியாவில் நன்னெறி விழுமியங்கள் குறைந்து வருவது வேதனையைத் தருகிறது என்று குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.