2013-01-02 15:35:51

கற்றனைத் தூறும் - முதலைக் கண்ணீர்


சன.03, 2013. முதலைக் கண்ணீர் என்பது ஒருவர் துன்புறும்போது, வருத்தப்பட்டு அழுது கண்ணீர் வடிப்பது போல் நடிப்பதாகும். முதலை தன் இரையை விழுங்கும்போது கண்ணீர் விடுவது போல தோற்றம் தரும். நமக்கு உணவைப் பார்த்ததுமே வாயில் உமிழ் நீர் சுரப்பதுபோல, அது தன் இரையைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் வருவதும், இரை நெருங்கியதும் அதை கவ்விப் பிடிப்பதும் அதன் இயல்பு.
உண்மையில் முதலைகள் அழுவதில்லை, ஏனென்றால் அவைகளுக்கு கண்ணீர் நாளங்களே (Tear ducts) கிடையாது எனத் தெரிகிறது. ஏனென்றால் அவைகள் பெரும்பாலும் தண்ணீரிலேயே இருப்பதால் கண்களை, குறிப்பாக கருவிழிகளை (Cornea) காய்ந்து விடாமல் நனைக்க கண்ணீர் தேவையே இல்லை. தண்ணீரை விட்டு நிலத்திற்கு வரும்போது, இமைகளையும், கண்களையும் நனைக்கும் வகையில் கண்களில் திரவம் சிறிதளவு சுரக்கிறது, ஆனால் அது கண்ணீரில்லை.
பின், இரையை விழுங்கும்போது கண்களில் எப்படி, ஏன் நீர் வடிகிறது?
கண்களை நனைத்து ஈரமாக்கும் சுரப்பிகள் கிட்டத்தட்ட முதலையின் தொண்டைக்கருகில் இருபக்கமும் இருப்பதாக முதலையின் உடற்கூறு அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இரையைப் பார்த்ததுமே சுரப்பிகள் சுரக்க ஆரம்பித்து விடுகின்றன. எனவே இரையை விழுங்கும்போது, இரையால் சுரப்பிகளின் மீது ஏற்படுத்தும் அழுத்தம், சுரப்பியிலிருந்து அதிகளவு திரவத்தை கண்களில் வெளிப்படுத்தி பெருமளவு கண்ணீர் வடிப்பது போன்ற தோற்றம் தருகிறது. இரையை விழுங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறதோ, அவ்வளவு நேரம் கண்ணீர் வடிப்பது போன்றும் தெரிகிறது.
(ஆதாரம் : கீற்று வலைத்தளம்)








All the contents on this site are copyrighted ©.