2013-01-02 15:29:40

அன்னை மரியா திருத்தலங்கள் – உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்கா


சன.02,2013. அன்பு நேயர்களே, மழலைப் பருவம் முதல் மண்ணிலிருந்து மறையும் இறுதிக்கட்டம் வரை அனைத்து மனிதர்கள் நாவில் நர்த்தனம் புரியும் அழகான சொல் அம்மா. அம்மா என்ற சொல்லுக்கு இணையான வேறு சொல் இவ்வுலக மொழிகளில் கிடையாது. தள்ளாத வயதிலும்கூட தனது அம்மாவை நினைத்துப் பார்க்கும் அளவுக்கு, அம்மா என்றாலே அனைவருக்கும் அதிகம் பிடிக்கும். அதனைல்தான் அம்மா என்று அழைக்காத உயிரில்லையே!.. அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே!..நேரில் வந்து பேசும் தெய்வம் பெற்றதாயன்றி வேறொன்று ஏது? என்ற கவிஞர் வாலியின் வரிகள் அவ்வளவு பிரபலமடைந்துள்ளன. ஆண்டவர் இயேசுவின் அன்னையான மரியா, ஒரு வரலாற்று மனிதர். ஒரு காவிய நாயகி. இயேசு எனும் மகா காவியத்தை ஈன்றெடுத்தார் என்பதால் அவரும் காவியமாகவேத் திகழ்கிறார். கத்தோலிக்கத் திருமறையின் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வரலாற்றில் அன்னைமரியா ஏற்படுத்திய தாக்கங்கள் எண்ணற்றவை. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் வாழ்விலும் வார்த்தையிலும், அம்மா, மரியே, தாயே என்ற சொற்கள் அமுதமாய், தேனாய், மதுரகானமாய் அன்றாடம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இறைவனின் தாயாம் அன்னை மரியாவைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் கொண்டாடும்போது பிற கிறிஸ்தவ சபையினரும், பிறமதத்தவரும்கூட அந்தத் தாயைப் போற்றுகின்றனர். இதற்கு உலகெங்கிலும் இருக்கின்ற அன்னைமரியா திருத்தலங்களே சான்று.
தமிழகத்தின் வேளாங்கண்ணி, இலங்கையின் மடு, பிரான்சின் லூர்து, சலேத், போர்த்துக்கல்லின் பாத்திமா, மெக்சிகோவின் குவாதாலூப்பே, இத்தாலியின் லொரேத்தோ, உரோம் நகரின் திவினோ அமோரே, போஸ்னியாவின் மெச்சுக்கோரே, போலந்தின் செஸ்டகோவா இப்படி அன்னைமரியா திருத்தலங்களுக்கு ஒருமுறை சென்று வந்தாலே போதும், அங்கு வரும் பக்தர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளலாம். நோய்கள் நீங்கி நலம்பெற, தேவைகள் நிறைவுபெற, கவலைகள் தீர, குழப்பங்கள் மறைய, ஆன்ம நலம் பெற, சண்டைசச்சரவுகள் நீங்கி அமைதி பெற என அம்மா என அன்பொழுக அழைத்து அந்த அம்மாவின் அருளாசீரைப் பெற்றுச் செல்லும் மனிதர்கள் ஏராளம் ஏராளம். நிறம், இனம், மதம், மொழி, நாடு என்ற வேற்றுமை பாராது மக்கள் அன்னைமரியாவை நாடிச் சென்று மனநிறைவு பெற்றுச் செல்கின்றனர். இந்த அன்னையும் தனது பிள்ளைகளைத் தான் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களுக்குக் காந்தமாய்க் கவிர்ந்திழுக்கிறார். இலட்சக்கணக்கான அன்னைமரியா பக்தர்கள் இந்த 2013ம் ஆண்டுப் புத்தாண்டை வேளாங்கண்ணியில் தொடங்க விரும்பி அங்குச் சென்றுள்ளனர். இந்த அனைனை விசுவாசத்தின் தாய். இறைவனது வார்த்தையை நம்பியதால் பேறுபெற்றவர் எனப் போற்றப்பட்டவர். இறைவனால் ஆகாதது எதுவுமே இல்லை என்பதை முழுமையாக நம்பியவர். எனவே இந்தப் புதிய 2013ம் ஆண்டில், இந்த விசுவாசத்தின் ஆண்டில், இந்த நம்பிக்கை ஆண்டில் உலகின் அன்னைமரியா திருத்தலங்களுக்கு நாமும் இந்த தொடர் நிகழ்ச்சியின் மூலமாக ஓர் ஆன்மீகப் பயணம் செல்வோம். இந்த அன்னைமரியாவின் விசுவாச வாழ்வை நாமும் பின்தொடருவோம். இந்தப் பயணத்தில் முதலில், அன்னைமரியா திருத்தலங்களுக்கு எல்லாம் தலைமையாய் விளங்கும் உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்கு முதலில் செல்வோம்.
மேரி மேஜர் என்ற பெயரிலேயே இந்தப் பசிலிக்காவினுடைய பெருமைகள் தெரியவரும். இது உரோமையிலுள்ள நான்கு தொன்மைமிக்க பசிலிக்காக்களில் ஒன்று. உரோம் எஸ்குலின் குன்றின்மீது அமைந்துள்ள இந்தப் பசிலிக்கா, நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் மணிக்கூண்டு உரோமிலுள்ள இதர மணிக்கூண்டுகளில் அதிக உயரமானதாகும். துருக்கி நாட்டிலுள்ள எபேசு நகரில் கி.பி.431ம் ஆண்டில் கூடிய பொதுச் சங்கம், புனித கன்னிமரியை, இறைவனின் தாயாக அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டது. “Theotokos” அதாவது மரியா, இறைவனின் தாய் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் புனித கன்னிமரியா பக்தியும் பரவலாகப் பரவியது. இதனால் உரோமைப் பேரரசில் மரியாவுக்கென பல இடங்களில் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. திருத்தந்தை 3ம் சிக்ஸ்துசும்(கி.பி.432-440), புனித கன்னிமரிக்கென எஸ்குலின் குன்றின்மீது ஆலயம் கட்ட விரும்பினார். ஆயினும், இதற்கு முன்னதாகவே இந்த இடத்தில் மரியாவுக்கென முதலில் ஆலயம் கட்டப்பட்டதாக 13ம் நூற்றாண்டில் பர்த்தோலோமே தெ த்ரெந்தோ என்ற துறவி கூறியிருக்கிறார்.
குழந்தைப்பேறு இல்லாத பக்தியுள்ள ஜொவான்னி பத்ரிசியோவும் அவரது மனைவியும் தங்களது சொத்துக்களையும் பொருள்களையும் திருஅவைக்கு நன்கொடையாக அளிக்கத் திட்டமிட்டனர். கி.பி.358ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதிக்கும் 5ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் புனித கன்னிமரியா ஜொவான்னிக்கும், திருத்தந்தை லிபேரியோவுக்கும் கனவில் தோன்றி அன்றிரவு பனி பெய்ந்திருந்த இடத்தில் தனக்கென ஆலயம் எழுப்புமாறு கேட்டுக்கொண்டார். ஏனெனில் ஆகஸ்ட் உரோமைக்கு கடுமையான கோடைகாலம். அக்காலத்தில் பனி பெய்வது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆயினும் அன்று காலையில் அவ்விடம் சென்று இவ்விருவரும் பார்த்தபோது பனி பெய்ந்திருந்த்து. எனவே அந்த இடத்தில் மரியாவுக்கென முதல் ஆலயம் எழுப்பப்பட்டதாக த்ரெந்தோ துறவி சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஆலயம் பனிமய மாதா ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் பல ஆண்டுகள் உள்ளும் புறமும் சீரமைக்கப்பட்டுத் தற்போதைய பசிலிக்காவாகக் கம்பீரமாய்க் கவினுறக் காட்சி அளிக்கிறது. இந்தப் புனித மேரி மேஜர் பசிலிக்கா, அக்காலத்தைப் போன்று இக்காலத்திலும் மக்கள் விரும்பிச் செல்லும் புனித இடமாக இருக்கின்றது. ஆண்டின் 365 நாள்களும் திருப்பயணிகள் கூட்டம் கூட்டமாக இந்தப் பசிலிக்கா சென்று செபிப்பதைக் காண முடிகின்றது. இங்கு ஒரு பீடத்திலுள்ள சகாய மாதா படம், நற்செய்தியாளர் புனித லூக்கா வரைந்த படமெனவும் சொல்லப்படுகிறது. இறைவனின் தாயான மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதலும், மிகப் பெரியதும், மிக நீளமானதும், மிக முக்கியமான ஆலயமுமாக மேரி மேஜர் பசிலிக்கா அமைந்திருக்கின்றது. இந்தப் பசிலிக்காவின் உட்புறக்கூரை மரத்தாலானது. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கூரை, காஸ்தில்லா அரசி எலிசபெத் வழங்கிய தங்கத்தினால் அழகுபடுத்தப்பட்டது எனவும் வரலாறு கூறுகிறது.
மேலும், இங்கு தலைமைப் பலிபீடத்துக்குக் கீழ் இயேசு பிறந்த மாட்டுத்தொட்டிலின் சில மரத்துண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்தப் பசிலிக்கா, மாட்டுத்தொட்டிலின் புனித மரியா என்றே முன்னர் அழைக்கப்பட்டது. 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி மரியா, பாவமின்றி பிறந்தார் என அறிக்கையிட்ட திருத்தந்தை 9ம் பத்திநாதர், இந்தச் சிறு புனித மரக்கட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தைப் புதுப்பிக்குமாறு கட்டளையிட்டார். இந்தப் புனித மரக்கட்டைகள் 642ம் ஆண்டில் திருத்தந்தை முதலாம் தெயோதோர் காலத்தில் உரோமைக்குக் கொண்டுவரப்பட்டது. பளிங்கு கற்களால் அழகாகக் காட்சியளிக்கும் இந்த இடமும் மொத்த பசிலிக்காவும் பக்தர்களைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கின்றன. அன்னைமரியாவின் சிறப்பை அறிவித்துக் கொண்டிருக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.