2013-01-01 15:20:46

திருத்தந்தையின் மூவேளை செப உரை


சன.01,2013. 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!' என்ற விவிலிய இறைஆசீரோடு 2013ம் ஆண்டின் முதல் நாளில் உங்களை வாழ்த்த ஆவல் கொள்கிறேன் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புத்தாண்டு நாள் திருப்பலியை நிறைவு செய்த பின், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகளுக்கு நண்பகல் மூவேளை ஜெப உரையும் வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஒளியும் வெப்பமும் எவ்வாறு உலகிற்கு ஆசீராக உள்ளதோ அவ்வாறே இறைவனின் ஒளியும் மனித குலத்திற்கு உள்ளது. முதலில் அன்னைமரிக்கும், யோசேப்புக்கும், சில இடையர்களுக்கும் பெத்லகேமில் தோன்றிய இந்த ஒளி, பின்னர், சூரியன் உதித்து மேலெழும்பி வருவதுபோல் உலகம் முழுவதும் பரவியது.
புனித பூமியில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் அமைதியின் நற்செய்தியை வழங்கினார் இயேசு. ' உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! ' என்று அன்று வானதூதர்கள் பாடியது இன்றும் பேச்சுவர்ர்த்தைகளை கட்டியெழுப்பவும், புரிந்துகொள்ளுதலையும் ஒப்புரவையும் ஊக்குவிக்கவும் தேவைப்படும் அன்பின் நடவடிக்கைகளுக்கான நாதமாக உள்ளது. இதனாலேயே, இயேசு பிறப்பின் எட்டு நாட்களுக்குப்பின் நாம் உலக அமைதி தினத்தைச் சிறப்பிக்கின்றோம்.
இவ்வுலகம் தரமுடியாத அமைதியைத் தரவந்தார் குழந்தை இயேசு. அவரே பகைமைகளின் சுவரைத் தகர்த்தெறிந்தார். ‘அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்’ என, தன் மலைப்பொழிவில் அறிவித்தவர் அவரே.
அமைதி ஏற்படுத்துவோர் யார்? தீமையை நன்மையால் வெல்வோர், உண்மையின் சக்தியுடனும், செபம் மற்றும் மன்னிப்பு எனும் ஆயதங்களுடனும், நேர்மையான செயல்பாடுகளின் வழியாகவும், அறிவியல் ஆய்வுகள் மூலமான வாழ்வின் பணிகளுடனும், கருணை நடவடிக்கைகள் மூலமும் செயலாற்றுவோரே அவர்கள். அமைதியான வழியில் ஆரவாரமின்றி மனித குல முன்னேற்றத்திற்கு பணியாற்றுவோரே அவர்கள்.
இந்த புதிய ஆண்டு அனைத்து மக்களுக்கும் குடும்பங்களுக்கும் நாடுகளுக்கும் உலகம் முழுமைக்கும் அமைதியின் பாதையாக இருக்க வேண்டுமென உதவுமாறு அனனை மரியின் பரிந்துரையை வேண்டுகிறேன் எனக்கூறி தன் மூவேளை செப உரையை நிறைவு செய்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.