2013-01-01 15:10:56

கற்றனைத் தூறும் - மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகின்றன?


சன.02, 2013. கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்கள் வெவ்வேறு அளவுகளில் வேறுபடுவதே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரணமாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது.
மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குதலேயாகும். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும். இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.
(ஆதாரம் : இணையத் தமிழ் உலகம்)








All the contents on this site are copyrighted ©.