2012-12-31 14:00:53

கற்றனைத் தூறும் - புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் தீர்மானங்களும்


சன.01, 2013. சரித்திரக்குறிப்புகளிலிருந்து நாம் தெரிய வருவது என்னவென்றால், முதல் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பாபிலோனியாவில், அதாவது ஈராக்கில் இடம்பெற்றன. நாள்காட்டிகள் அறிமுகமாவதற்கு முன்னால், இந்த புத்தாண்டு தின விழா, இளவேனில் காலத்தில் விதை விதைக்கும் நாட்களில் சிறப்பிக்கப்பட்டது. பாபிலோனியாவில் இக்கொண்டாட்டம் 11 நாட்கள் இடம்பெற்றது. அதுவும், வளம் மற்றும் வேளாண்மையின் கடவுளின் பெயரால் குடித்துக் கொண்டாடினர் இவ்விழாவை. புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது கடந்த ஆண்டின் நன்மைகளுக்காக நன்றி கூறுவதாகவும், வருங்காலத்தின் நல்ல அறுவடைக்கு விண்ணப்பிப்பதாகவும் இருந்தது. பிற்காலத்தில் இக்கொண்டாட்டங்களோடு, நல்ல தீர்மானங்களை எடுப்பதும் இணைந்து கொண்டது. ஒரு வாரம் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவின் இறுதி நாளன்று ஒரு மயிலின் மேல் தங்கள் கைகளை வைத்து, ' தங்கள் பதவிக்கு இயைந்த வகையில் வாழ்வை நடத்துவோம்’ என உறுதியெடுக்க வைக்கப்பட்டனர் உயர் குடி மக்கள் மற்றும் உயர் கௌரவம் வழங்கப்பட்டவர்கள். 'மயில் உறுதிமொழி' என்று கூட இது அழைக்கப்பட்டது. நல்வாழ்வை மேற்கொள்வோம் என்று இந்நாளில் உறுதிமொழி எடுக்கும் பழக்கம் பாபிலோனியர்களிடம்தான் தோன்றியது. மற்றவர்களிடம் கைமாற்றாக வாங்கியவைகளை திரும்பக் கொடுத்துவிடுவோம் என்ற உறுதிமொழிகள் துவக்க காலத்தில் புத்தாண்டு தினத்தில் எடுக்கப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.