2012-12-29 14:58:17

பிரதமர் மன்மோகன் சிங் : வன்முறை வேண்டாம்


டிச.29,2012. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம் மருத்துவக் கல்லூரி மாணவியின் மரணத்தையொட்டி தலைநகர் புதுடெல்லியில் ஆயிரக்கணக்கானோர் அமைதியான போராட்டத்தை மேற்கொண்டனர்.
இவ்விறப்பு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இம்மாணவி உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது; அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகமும் ஒன்றுபட்டு இது போன்ற சம்பவங்களுக்கு எதிராகக் கைகோர்க்க வேண்டும்; இந்தியா பாதுகாப்பான வாழ்விற்கு ஏற்ற இடம் என்பதை நிலைநாட்ட வேண்டும்; அதேசமயம் வன்முறை வேண்டாம்; இளைஞர்கள் அமைதியான முறையில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அப்பெண்ணின் மரணம் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு; இது தொடர்பாக ஏற்கனவே அனைவரும் தங்களின் எதிர்ப்புக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி இருக்கிறோம்; அப்பெண்ணின் மரணத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; இச்சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்; நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்; அனைவரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்துங்கள் எனவும் பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மருத்துவக் கல்லூரி மாணவியின் இறப்பினால், இந்தியா முழுவதிலும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்செயலைச் செய்த ஆறுபேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் மீது கொலைக் குற்றமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.