2012-12-27 15:17:24

பாரம்பரியங்களின் சங்கமமாக விளங்குவது கிறிஸ்துபிறப்புப் பெருவிழா - ஆயர் Mikael Mouradian


டிச.27,2012. கிறிஸ்துபிறப்புப் பெருவிழா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமமாக விளங்கும் ஒரு விழா என்று அமெரிக்க, கனடா நாடுகளின் கத்தோலிக்க ஆர்மீனியத் திருஅவையின் தலைவரான ஆயர் Mikael Mouradian கூறினார்.
இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவையொட்டி செய்தி வெளியிட்ட ஆயர் Mouradian, நம்பிக்கை ஆண்டைத் துவக்கிவைத்த வேளையில், வானதூதரின் வார்த்தைகளைக் கேட்ட மரியா நமக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியதைத் தன் செய்தியில் சுட்டிக் காட்டினார்.
மகிழ்வையும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கும் இத்திருநாளின்போது, அமெரிக்காவில் அண்மையில் குழந்தைகள் கொல்லப்பட்டது, சிரியா நாட்டில் தொடர்ந்துவரும் வன்முறைகள் ஆகியவை இத்திருநாளின் மகிழ்வைக் குறைக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார் ஆயர் Mouradian.
அன்னை மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நம்பிக்கையில் நம் வாழ்வைத் தொடர்ந்தால், நம் வாழ்வு குழந்தையாய்ப் பிறந்துள்ள இறைவனின் அழகை வெளிப்படுத்தும் என்று ஆர்மீனிய கத்தோலிக்கத் தலைவரான ஆயர் Mouradian கூறினார்.








All the contents on this site are copyrighted ©.