2012-12-27 15:15:42

ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக இலங்கையை உருவாக்க அர்ப்பணிப்போம்


டிச.27,2012. பல்வேறு பிறரன்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி உழைத்துவரும் இலங்கை திருஅவை அதையும் தாண்டிச் சென்று, எழைகளை இன்னும் ஏழைகளாக வைத்திருக்கும் காரணகாரியங்கள் குறித்து ஆராய வேண்டும் என்ற அழைப்பை, கிறிஸ்துபிறப்புப் பெருவிழா நமக்கு விடுக்கின்றது என தங்கள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளனர் இலங்கை ஆயர்கள்.
கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கென சிறப்புச்செய்தி வெளியிட்டுள்ள இலங்கை ஆயர்கள், எழைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தவும், நமது சமூகங்களைச் சூழ்ந்துள்ள துன்ப நிலைகள் குறித்து உணர்ந்துச் செயல்படுபவர்களாக வாழவும், கிறிஸ்துபிறப்புப் பெருவிழா அழைப்பு விடுக்கின்றது என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மனித மாண்பு மதிக்கப்படா நிலைகளும், குற்றங்கள் தண்டனையின்றி தப்பும் கலாச்சாரமும் பெருகிவருவது குறித்த கவலையையும் அச்செய்தியில் வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.
இறைவிருப்பத்திற்கு எதிராகச் செல்லும் அனைத்தையும் மாற்றியமைக்க நம்மை அர்ப்பணித்து, நம்மிடையே அமைதியையும் ஒப்புரவையும் கொண்டுவருபவர்களாக ஒவ்வொருவரும் உழைப்போம் என்ற அழைப்பையும் விசுவாசிகளுக்கு விடுத்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.
அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக இலங்கையை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம் எனவும் தங்கள் செய்தியின் இறுதியில் விண்ணப்பித்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.