2012-12-26 14:45:01

அதிக ஆடம்பரமின்றி கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் விருந்துகளிலும் உண்மையான மகிழ்வை நாம் காண முடியும் - பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர்


டிச.26,2012. அதிக ஆடம்பரமோ, செலவோ இன்றி கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் விருந்துகளிலும் உண்மையான மகிழ்வை நாம் காண முடியும், இவ்விருந்துகளுக்கு ஆகும் செலவுகளை தேவையில் உள்ளவர்களுக்கு வழங்கும்போது நமது மகிழ்வு இரட்டிப்பாகும் என்று பிலிப்பின்ஸ் நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Palma கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டு மக்கள் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டங்களைக் குறைத்துக்கொண்டு, Bopha சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக உதவிகள் செய்யவேண்டும் என்று திருஅவையும், அரசும் விண்ணப்பித்துள்ளன.
கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பிலிப்பின்ஸ் நாட்டில் கிறிஸ்மஸ் விழா ஆடம்பரமாக, அதிக செலவுகளுடன் கொண்டாடப்படும். இவ்வாண்டு, அந்நாட்டின் திருஅவையும், அரசும் தங்கள் கொண்டாட்டங்களை நிறுத்தி, அத்தொகையை Bopha சூறாவளி துயர்துடைப்புக்கென வழங்கியுள்ளன.
இம்மாதம் 4ம் தேதி பிலிப்பின்ஸ் நாட்டின் Mindanao பகுதியைத் தாக்கிய Bopha சூறாவளியில் 1047 பேர் உயிரிழந்தனர், மற்றும் 800க்கும் அதிகமானோர் காணாமற் போயுள்ளனர். இச்சூறாவளியால் வீடுகளை இழந்தோரில், 26,000க்கும் அதிகமானோர் இன்னும் முகாம்களில் தங்கியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.