2012-12-22 15:35:42

திருத்தந்தை : கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வில் கொடுக்கும் முன்னுரிமைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்


டிச.22,2012. கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வில் கொடுக்கும் முன்னுரிமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தங்களது இறைநம்பிக்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Financial Times என்ற இதழில் தான் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு கேட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்மஸ் மிகுந்த மகிழ்ச்சியின் காலம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை, அதேசமயம், ஆன்மாவைப் பரிசோதித்துப் பார்ப்பது உட்பட வாழ்வு குறித்து ஆழ்ந்த சிந்திக்க வேண்டிய காலமுமாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டின் இறுதி, பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய தருணமாகப் பலருக்குத் தெரியலாம், ஆயினும், கிறிஸ்மஸ் குடிலின் தாழ்ச்சி, ஏழ்மை, எளிமை ஆகிய பண்புகளிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொண்டோம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்கள் நற்செய்தியை அதிகம் வாசிப்பதற்கு இந்தக் கிறிஸ்மஸ் காலத்தைப் பயன்படுத்துமாறும் பரிந்துரைத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒரு தினத்தாளில் திருத்தந்தை எழுதும் கட்டுரைகளைப் பார்ப்பது சாதாரணமாக இடம்பெறுவது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.