2012-12-21 15:15:34

ஐ.நா.பொதுச் செயலர் : இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமையே சிறந்த வழி


டிச.21,2012. மக்களுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பால் வறுமையை ஒழிப்பதிலும், சனநாயகச் சுதந்திரத்தை நோக்கிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும் அண்மை ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
டிசம்பர் 20, இவ்வியாழனன்று அனைத்துலக மனிதத் தோழமை தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் திட்டங்களிலும் கொள்கைகளிலும் செயலாக்கங்களிலும் மக்கள் ஒன்றுசேர்ந்து பங்கு கொண்டால் நமது இலக்குகளை அடைய முடியும் எனக் கூறினார்.
அரசியல்சுதந்திரம், கடமையுணர்வு, சமத்துவம் ஆகியவை அதிகமாக வலியுறுத்தப்படும் இக்காலத்தில், உலக அளவில் ஒருவரையொருவர் சார்ந்திருப்பது, பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தன்மைகளை ஆழப்படுத்துகின்றது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.
21ம் நூற்றாண்டில் மக்களிடையே உறவுகளை வளர்க்கும் அடிப்படையான மற்றும் அனைத்துலக விழுமியங்களில் ஒன்றாக இருப்பது தோழமையுணர்வு என்பதை ஏற்ற ஐ.நா. பொது அவை, 2005ம் ஆண்டில் அனைத்துலக மனிதத் தோழமை தினத்தை உருவாக்கியது.







All the contents on this site are copyrighted ©.