2012-12-20 15:10:20

திருவருகைக்காலச் சிந்தனை – வழங்குபவர் அருட்பணி இயேசு கருணா


RealAudioMP3 ““இருளிலும் இறப்பின் பிடியில் இருப்போருக்கு ஒளிதரவும் நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.” (லூக் 1:78-79)
இயேசுவின் பிறப்பையொட்டி நடக்கின்ற மற்றொரு பிறப்பு திருமுழுக்கு யோவானின் பிறப்பு. எலிசபெத் கருவுற்றிருப்பதை மரியாளுக்குக் கோடிட்டுக் காட்டுகிற கபிரியேல் வானதூதர், ‘கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை’ என்று மொழிகின்றார். கடவுளின் பரிவுள்ளம், இரக்கம், விடியல் இயேசுவில் வெளிப்படும் என்பதைத் தன் பாடலில் வெளிப்படுத்துகின்றார் சக்கரியா. ‘இதுதான் நான்’ ‘எனக்கு குழந்தையில்லை’, ‘என்னை யாரும் மதிக்கமாட்டார்கள்’, ‘நான் செய்த அனைத்து நற்செயல்களும் பலனில்லாமலே போய்விட்டன’ என புலம்பிக்கொண்டிருந்து சக்கரியாவிற்கு இறைவனின் வல்லமை வெளிப்படுத்தப்படுகின்றது. தன் வரையறைகளால் தன்னைக் கட்டிக்கொண்ட சக்கரியா பரந்த எண்ணத்திற்குப் பிறக்கின்றார். மிருகக்காட்சி சாலைகளில், அல்லது கோவில்களில் யானையைக் கட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். பெரிய யானையை சிறிய சங்கிலியால் கட்டியிருப்பார்கள். பெரிய மரத்தையே எளிதாகச் சரித்து விடும் யானை எப்படி இந்தச் சிறிய சங்கிலியை அறுக்காமல் இருக்கின்றது என்று நாம் நினைக்கலாம். யானையைப் பயிற்றுவிப்பவர்கள் அது குட்டியாக இருக்கும்போதே அதன் பயிற்சியைத் தொடங்குவார்கள். குட்டியாக இருக்கும்போது கட்டப்படுகின்ற அந்தச் சங்கிலியை அறுக்க முடியாத யானை வளர்ந்த பின்னும் தன்னால் அறுக்க முடியாது என்றே நினைக்குமாம். இன்று நாம் அறுக்க முடியாது என்று நம்மையே கட்டிவைத்திருக்கும் அடிமைத்தனம் என்ன?








All the contents on this site are copyrighted ©.