2012-12-19 15:21:39

திருஅவையில் திருப்புமுனைகள் – புனித பீட்டர் கனிசியுஸ் (1521-1597)


டிச.19,2012. புனித பீட்டர் கனிசியுஸ், கத்தோலிக்கத் திருஅவையில் மறுமலர்ச்சியும் புதுப்பித்தலும் ஏற்படுவதற்காகக் கடுமையாய் அயராது உழைத்தவர். நாடுகளின் அரசிலும் வணிகத்திலும் அறநெறி விழிப்புணர்வை வளர்த்த இயேசு சபை அருள்தந்தை இவர். கத்தோலிக்க அச்சகத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் இவர் போற்றப்படுகிறார். கிறிஸ்தவ எழுத்தாளர்களுக்கு எடுத்துக்காட்டாய்த் துலங்கும் இவரது வாழ்வில் உண்மையைப் பரப்புவதில் இருந்த தாகத்தை ஆசிரியர்கள் காண முடியும். அக்காலத்தில் ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, பொகேமியா, மொராவியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பரவி வந்த புரோட்டஸ்டாண்ட் என்ற பிரிந்த கிறிஸ்தவ சபைக்கு எதிராகப் போராடிய ஒரு முக்கியமான இயேசு சபை அருள்தந்தையாவார் புனித பீட்டர் கனிசியுஸ். ஜெர்மனியில் பிரிந்த கிறிஸ்தவ சபை பெருமளவில் வேரூன்றிய காலத்துக்குப் பின்னர் அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையை வளர்த்தெடுத்த பெருமை இப்புனிதர் வழிநடத்திய இயேசு சபையைச் சாரும். ஜெர்மனியின் பாதுகாவலராகப் போற்றப்படும் புனித பீட்டர் கனிசியுஸின் விழா டிசம்பர் 21ம் தேதியன்று சிறப்பிக்கப்படுகின்றது. சிறந்த கல்வியாளராகவும், போதகராகவும், பேராசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய இப்புனிதர் 1521ம் ஆண்டு மே 8ம் தேதி தற்போதைய நெதர்லாந்தில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஆண்டில்தான் மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்கத் திருஅவையை விட்டு விலகினார்.
புனித பீட்டர் கனிசியுசுக்கும் மார்ட்டின் லூத்தருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். ஏனெனில் அக்காலத்தில் மேற்கத்திய கத்தோலிக்க உலகில் பெரும் பிரிவினை உருவாகக் காரணமானவர் மார்ட்டின் லூத்தர். புரோட்டஸ்டாண்ட் என்ற பிரிந்த கிறிஸ்தவ சபை உருவாக வித்திட்டவர் மார்ட்டின் லூத்தர். இவரது கருத்துக்கள் மேற்கத்திய நாகரிகத்தின் போக்கையே மாற்றின. அகுஸ்தீன் துறவு சபையில் சேர்ந்து கடும் செப தப வாழ்வை வாழ்ந்து வந்த மார்ட்டின் லூத்தர், ஓர் இறையியலாளர் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர். ஜெர்மானியரான இவரது இறையியல் கொள்கைகள் திருத்தந்தையின் அதிகாரத்துக்குச் சவால் விடுத்தன. இந்த மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்த கிறிஸ்தவ சபை, ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் ஆழமாக வேரூன்றியிருந்த காலத்தில், புனித பீட்டர் கனிசியுஸ் தனது போதனைகளாலும், கட்டுரைகளாலும் இந்நாடுகளில் கத்தோலிக்க விசுவாசத்தைத் தெளிவாக விளக்கினார். இலத்தீனிலும் ஜெர்மானியத்திலும் இவர் வெளியிட்ட மூன்று மறைக்கல்வித் தொகுப்புகள் மிகவும் சிறப்புமிக்கவை. காலத்துக்கும் நிலைத்து நிற்கின்றன. இத்தொகுப்புகள் அக்காலக் கத்தோலிக்கப் பகுதிகளில் மிகவும் பிரபலமடைந்தன.
புனித பீட்டர் கனிசியுஸ், ஜெர்மனியில் பிரிந்த கிறிஸ்தவ சபையினரோடு போராடி வந்த காலத்தில், இவர்கள் விடயத்தில் ரோமன் கத்தோலிக்கத் திருஅவை கட்டுப்பாடுகளைச் சற்றே தளர்த்த வேண்டுமெனத் திருத்தந்தையைக் கேட்டுக் கொண்டார். ஜெர்மானியர்களை நீங்கள் சரியாக நடத்தினால் அவர்கள் உங்களுக்கு அனைத்தையும் கொடுப்பார்கள் என்று திருத்தந்தைக்கு எழுதினார். விசுவாசத்தைப் பொருத்தவரைப் பலர் தவறு செய்கிறார்கள். ஆயினும் இறுமாப்பின்றி இருக்கிறார்கள். இந்த லூத்தரன் கிறிஸ்தவ சபையினர் எல்லாவற்றுக்கும் திறந்தமனம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். இந்த ஜெர்மானியர் தங்களது போக்கில் தவறிழைக்கிறார்கள். இவர்களில் பலர் மிகுந்த நேர்மையுடன் நடக்கிறார்கள். இவர்கள் எளிய மனம் கொண்டவர்கள். இந்தச் சீர்திருத்த சபையினருக்கு எதிராக வாக்குவிவாதங்களில் இறங்குவதைவிட விசுவாசம் குறித்த நேர்மையான விளக்கமே சிறந்தது என்று திருத்தந்தைக்கு எழுதினார். John Calvin, Melanchton ஆகியோருக்கு எதிரானத் தாக்குதல்களை எதிர்த்தார். தாக்குதலான வார்த்தைகளால் நாம் நோயாளிகளைக் குணப்படுத்த முடியாது, அவை அவர்களை குணமாக்க முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும் என்று சொன்னவர் புனித பீட்டர் கனிசியுஸ். இவர் அக்காலத்திலே கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைப்புக்காக உழைத்தவர். கிறிஸ்தவர்கள் மத்தியில் பிளவுகளை நீக்கி அவர்கள் ஒன்றிணைந்து வாழ உழைத்தவர்.
இயேசு கிறிஸ்துவை அடைவதற்குப் பல பாதைகள் உள்ளன. ஆயினும் அவற்றில் மிகச் சிறந்த பாதை அன்னைமரியா என்று போதித்தவர் புனித பீட்டர் கனிசியுஸ். கத்தோலிக்கத் திருஅவையில் மரியா பக்திக்கு அடிப்படையாக அமைவது “அருள்நிறைந்த மரியே” என்று சொன்னவர் இவர். அருள்நிறைந்த மரியே என்று நாம் செபிக்கும் செபத்தில், “அருள்நிறைந்த மரியே, இறைவனின் தாயே பாவிகளாகிய எமக்காக வேண்டிக்கொள்ளும்” என்ற வார்த்தைகளை இணைத்த பெருமை புனித பீட்டர் கனிசியுஸையே சேரும். இவர் இச்செபத்தைச் சொல்லி 11 ஆண்டுகள் கழித்து 1566ம் ஆண்டில் திரிதெந்தின் பொதுச்சங்கத்தின் மறைக்கல்வியில் இச்செபம் சேர்க்கப்பட்டது. இவ்வளவு சிறப்புமிக்க புனித பீட்டர் கனிசியுஸ், தனது 19வது வயதில் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் முதுகலைபட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் புனித Peter Faberரைச் சந்தித்தார். இவர் இயேசு சபையை நிறுவிய புனித இலெயோலா இஞ்ஞாசியாருடன் இருந்த முதல் குழுவில் ஒருவர். எனவே இவரால் ஈர்க்கப்பட்டு புதிதாக வளர்ந்து வந்த இயேசு சபையில் சேர்ந்தார் பீட்டர் கனிசியுஸ். இச்சபையில் சேர்ந்த முதல் ஜெர்மானியர் இவர். 1546ம் ஆண்டு தனது 25வது வயதில் குருவான பீட்டர் கனிசியுஸ், இத்தாலியின் மெசினாவில் இயேசு சபை கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இவர் ஜெர்மனிக்கு மறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார்.
ஜெர்மனியில் பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார் பீட்டர் கனிசியுஸ். அந்நாட்டில் பல கல்லூரிகளும் குருத்துவப்பயிற்சிக் கல்லூரிகளும் உருவாகக் காரணமானார். சாதாரண பொதுமக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் மறைக்கல்வியை விளக்கி எழுதினார். இவரது மறையுரைகளால் கவரப்பட்ட மக்கள் இவர் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்பதற்குத் திரண்டு வந்தார்கள். பிணக்குகள் ஏற்பட்ட இடங்களில் அவற்றைத் தீர்த்து வைத்தார். குற்றம் கண்டவிடத்து திருஅவைத் தலைவர்களையும் இவர் விமர்சிக்கத் தவறவில்லை. அரசர்களையும் எச்சரித்தார். தனது வாழ்வால் கத்தோலிக்க விசுவாசத்துக்குச் சாட்சி பகர்ந்தார். பல்வேறு திறமைகளால் நிறைந்திருந்த இயேசு சபை அருள்தந்தை பீட்டர் கனிசியுஸ், தனது 70வது வயதில் பக்கவாத நோயினால் தாக்கப்பட்டு 1597ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ஃப்ரைபூர்கில் இறந்தார். இவர் பெயரில் பல பள்ளிகளும் கல்லூரிகளும் மருத்துவமனைகளும் உள்ளன. 1925ம் ஆண்டு திருத்தந்தை 9ம் பத்திநாதர் இவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தி திருஅவையின் மறைவல்லுநர் எனவும் அறிவித்தார்.
புனித பீட்டர் கனிசியுஸ் அதிகமாக வேலை செய்வது குறித்து அவரிடம் கேட்ட போது சொன்னார் : “உனக்கு நிறைய வேலைகள் இருப்பதாக உணர்ந்தால் கடவுளின் உதவியுடன் அவை அனைத்தையும் செய்து முடிப்பதற்கு நேரத்தைக் கண்டடைவாய்” என்று.
பிறரில் ஏற்றப்பட வேண்டிய ஒளி முதலில் உன்னில் ஏற்றப்படட்டும்.








All the contents on this site are copyrighted ©.