2012-12-19 15:13:30

டிச.20. திருவருகைக்காலச் சிந்தனை. வழங்குபவர் அருட்திரு இயேசு கருணா


“கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர, சகோதரிகளைப்போல் ஆக வேண்டியதாயிற்று.” (எபிரேயர் 2:17)
தொடக்கக் கிறிஸ்தவர்கள் இயேசுவிற்கு பல பெயர்களைக் கொடுக்கின்றனர். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குரு என அழைக்கின்றார். திருமுழுக்குப் பெற்ற அனைவரும் இயேசுவின் குருத்துவத்தில் பங்குபெறுகிறோம் என்று கற்பிக்கின்றது திருச்சபை. இயேசுவின் குருத்துவம் ‘வேரூன்றுதல்,’ ‘விழுது பரப்புதல்’ என்ற இரண்டு வார்த்தைகளில் அடங்கியுள்ளது. தன் தந்தையின் அன்பில் வேரூன்றி, பிறரன்பில் விழுது பரப்பினார். விவேகானந்தர் தம் 14 வயதில் துறவறம் மேற்கொள்ள விரும்பி தன் தாயிடம் அனுமதி கோரச் செல்கின்றார். ‘அம்மா, நான் துறவறம் மேற்கொள்ளப் போகிறேன். அனுமதி தருவீர்களா?’ என்ற கேட்ட அவரிடம் அவருடைய தாய், ‘போய், சமையலறையிலிருந்து கத்தியை எடுத்துக்கொண்டு வா’ என்கிறார். இவரும் எடுத்து வருகிறார். தாய் சொல்கிறர், ‘இப்போது நீ போக முடியாது’. ஒரு மாதம் கழித்து மறுபடியும் அனுமதி கேட்கின்றார். மறுபடியும் தாய் கத்தியை எடுத்துவரச் சொல்கின்றார். மறுபடியும் ‘இப்போது நீ போக முடியாது’ என்று அனுமதி மறுக்கின்றார். மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் அவர் தன் தாயிடம் அனுமதி கேட்க வருகின்றார். இம்முறையும் கத்தியை எடுத்துவரச் சொல்கின்றார். எடுத்து வந்தவுடன் தாய், ‘மகனே, நீ இப்போது துறவறத்திற்குச் செல்லலாம!’; என்று அனுமதி கொடுக்கின்றார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘அம்மா, ஒவ்வொரு முறையும் கத்தியை எடுத்துவரச் சொன்னபோது கத்தியைத்தானே எடுத்து வந்தேன். இப்போது மட்டும் எப்படி அனுமதி கொடுக்கிறீர்கள்’ என்று கேட்கின்றார். ‘மகனே, முதல் இரண்டு முறை கத்தியை எடுத்து வந்தபோது பாதுகாப்பான கைப்பிடியை நீ வைத்துக்கொண்டு வெட்டுகின்ற பகுதியை என்னிடம் நீட்டினாய். இன்றுதான் வெட்டுகின்ற பகுதியை நீ பிடித்துக்கொண்டு பாதுகாப்பான பகுதியை என்னிடம் நீட்டினாய். துறவறம் என்பதும் அதுதான். வெட்டுகின்ற பகுதியை நீ பிடித்துக்கொண்டு பாதுகாப்பான பகுதியை மற்றவர்களுக்கு நீட்டுவது.’ தன் ஒரே மகனை நமக்கு மீட்பராக அனுப்பியது தனக்கு வலித்தாலும், தன் ஒரே மகனை நமக்காய்த் தாரை வார்க்கின்றார் இறைவன். நாம் ஒருவர் மற்றவருக்கு நம்மையே கையளிப்பதே பதிலன்பு!







All the contents on this site are copyrighted ©.