2012-12-18 15:31:24

மலேரியா ஒழிப்பில் தாமதம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை


டிச.18,2012. மலேரியா ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கென உலக அளவில் வழங்கப்படும் நிதியுதவியில் குறிப்பிடத்தகும் வகையில் தாமதம் ஏற்படுவதால், இந்நோய் ஒழிப்பு நடவடிக்கைகளும் தாமதம் அடையக்கூடும் என WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதன் மூலம் அந்நோய் ஒழிப்பில் அண்மைக் காலங்களில் கிடைத்த பலன்கள், பலனற்றுப் போய்விடக்கூடும் எனவும், “மலேரியா குறித்த உலகளாவிய அறிக்கை 2012” என்ற தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது WHO நிறுவனம்.
மலேரியா நோயைத் தடுப்பதற்கும் அதனைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கான நிதிக் கையிருப்புக்கும், தேவைப்படும் நிதிக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் கொசு வலை விநியோகிக்கப்படுவது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் குறைவான அளவுக்கு குறைந்துள்ளது என்றும், அதன் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் மலேரியா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மலேரியா ஒழிப்புக்கு எதிரான செயற்பாடுகளை இன்னும் துரிதமாகச் செயல்படுத்துவதற்கு நேலும் 300 கோடி டாலர்கள் தேவை என்றும், அதற்காக புதிய வழிகளில் நிதியாதாரங்களை அதிகரிக்கும் வழிகளை தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2010ம் ஆண்டில் உலக அளவில் 21 கோடியே 90 இலட்சம் பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டனர். மேலும், ஏறக்குறைய 6 இலட்சத்து 60 ஆயிரம் பேர் மலேரியாவால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்கு உட்பட்ட சிறார் எனவும் WHO நிறுவனம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.