2012-12-18 15:36:55

தமிழகத்தில் மிதிவண்டி ஓட்டிகள் உயிரிழப்பு அதிகம்


டிச.18,2012. இந்தியாவில், இரண்டு சக்கர மிதிவண்டி ஓட்டுபவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கி இறக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை வகிப்பதாக மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்தான் தமிழ்நாட்டைவிட அதிக அளவில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் விபத்துக்களில் உயிரிழந்திருக்கின்றனர்.
மிதிவண்டியில் போகும்போது ஏற்பட்ட சாலை விபத்துக்களில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 1,412 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதாவது ஒரு நாளுக்கு நான்கு பேர் என்ற விகித்த்தில் இது இடம் பெற்றிருக்கின்றது.
இத்தகைய விபத்துக்களினால் உத்தரப்பிரதேச மாநிலத்தில், கடந்த ஆண்டு 2,338 பேர் இறந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கென்று சாலைகளில் தனியாக ஒதுக்கப்பட்ட வழிகள் இல்லாததே, இந்த அளவு அதிக எண்ணிக்கையில் மிதிவண்டி பயணிகள் விபத்தில் சிக்கி இறப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்று தமிழ் நாடு மிதிவண்டி சங்கத்தின் செயலர் எஸ்.ராதாகிருஷ்ணன் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.