2012-12-17 15:46:42

திருவருகைக்காலச் சிந்தனை – வழங்குபவர் அருள்திரு இயேசு கருணா


RealAudioMP3 “மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி. இஸ்ராயேலே! ஆரவாரம் செய். மகளே! எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. உனது துன்பத்தை அகற்றிவிட்டேன். ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.” (செப்பனியா 3:14ää18).
இறைவன் தன் ஒரே மகனை மீட்பராக இந்த உலகிற்கு அனுப்ப நினைத்தபோது எதற்காக எருசலேமை தேர்ந்தெடுத்தார்? யூப்ரடிஸ், டைகரிஸ் ஆறுகள் தாலாட்டி வளர்ந்த நினிவே நகரம், பாபிலோனயா நகரம், நைல் நதி தவழும் எகிப்து என நாகரீகங்கள் வளர்ந்திருந்த காலத்தில், யாருமே நினைவுகூறாத, சிறிய சீயோனை, எருசலேமைத் தேர்ந்துகொள்ளத் திருவுளம் கொள்கின்றார் இறைவன். நம் இறைவன் சிறியவகைளின் இறைவன். இன்றைய சூழலில் மனிதர்கள் சிறியதாக வைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள் என்றால் அது செல்ஃபோன் மட்டும்தான். மற்றது எல்லாம் பெரிது வேண்டுமென்றே விழைகின்றனர்: பெரிய வீடு, பெரிய கார், பெரிய தோட்டம், பெரிய நீச்சல்குளம், பெரிய உணவு விடுதி, பெரிய தியேட்டர், பெரிய வணிக வளாகம், பெரிய நகரம், பெரிய நெட்வொர்க். இப்படி பெரிதினும் பெரிது கேட்கின்ற மனுக்குலத்தின் சித்தாந்தத்தை இறைவன், ‘சிறிதினும், சிறிது கேள்’ என்ற புரட்டிப் போடுகின்றார். ஆங்கிலத்தில் அழகான பாடல் உண்டு: ‘ஒரு ஆணியை இழந்ததால் ஒரு காலணியை இழந்தான். ஒரு காலணியை இழந்ததால் ஒரு குதிரையை இழந்தான். ஒரு குதிரையை இழந்ததால் ஒரு வீரனை இழந்தான். ஒரு வீரனை இழந்ததால் ஒரு செய்தியை இழந்தான். ஒரு செய்தியை இழந்ததால் ஒரு போரை இழந்தான். ஒரு போரை இழந்ததால் ஒரு அரசையே இழந்தான்.’ இன்று நம் ஆன்மீக வாழ்வில் நாம் பேசுவதெல்லாம் பல நேரங்களில் இறையரசை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று வீர வசனங்கள் பேசுகின்றோமே தவிர அன்றாடம் இழக்கின்ற ஆணிகளை யாரும் கண்டுகொள்வதேயில்லை. இன்று நாம் சரிசெய்ய வேண்டிய சின்னச்சின்ன ஆணிகள் ஏராளம். அவைகளைச் சரிசெய்தாலே இறையரசு தானாய் வந்து சேரும். சிறிதினும் சிறிது பார்ப்போம். சிறிதினும் சிறிது கேட்போம். சிறிதினும் சிறிது செய்வோம். அவைகள் யாவும் பெரிதினும் பெரிதாக வளர்ந்து நிற்கும்.







All the contents on this site are copyrighted ©.