2012-12-17 15:37:07

35கி.மீட்டரில் 130 நாளில் ஒரு இலட்சம் பேர் கொலை: ஈழப் போர் குறித்து தகவல்


டிச.17,2012. "இலங்கையில், 130 நாளில், 35 சதுர கி.மீட்டரில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,'' என இலங்கையின் பி.பி.சி., முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹாரிசன் கூறினார்.
இலங்கையில் நடந்த நான்காம் கட்ட போர் குறித்து, அவர் எழுதிய ஆங்கில நூல், ‘ஈழம், சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்’ என்ற தலைப்பில், காலச்சுவடு பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நூல் ஆசிரியர் பிரான்சிஸ் ஹாரிசன், இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்ற நிலையிலும், போரில் இறந்தவர்கள் எத்தனை பேர், படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, காணாமல் போனவர்கள் நிலை என்ன என்பன போன்ற விவரங்கள் வெளியாகவே இல்லை எனக் கவலையை வெளியிட்டார்.
போர் இறப்பு குறித்து, ஐ.நா.நிறுவனம் வெளியிட்ட முதல் தகவலில், 40ஆயிரம் பேர் எனக் கூறியுள்ளதும், கடந்த வாரம் வெளியான ஐ.நா. நிறுவனத்தின் அறிக்கையில், ஒரு இலட்சம் பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், 2006 முதல் 2010ம் ஆண்டு வரை, ஒரு இலட்சம் பேர், இலங்கையில் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை எனவும் கூறினார் பிரான்சிஸ் ஹாரிசன்.
புதிய இலங்கையை கட்டமைப்போம் எனக் கூறும் இலங்கை அரசு, குறைந்தபட்ச உண்மைகளைக்கூட ஏற்க மறுப்பதால், புதிய இலங்கையை கட்டமைப்போம் என்ற வாக்குறுதியை, உலக சமூகம் நம்ப மறுக்கிறது எனக்கூறும் எழுத்தாளர் பிரான்சிஸ் ஹாரிசன், போரின் விளைவுகளைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, புனரமைப்புப் பணிகளைச் செய்ய, இலங்கை அரசு முன்வந்தால்தான், அமைதியான சமூகத்தை அந்நாட்டில் கட்டமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.