2012-12-15 16:07:13

திருத்தந்தை வழங்கிய உலக அமைதி நாள் செய்தியைக் குறித்து திருப்பீடப் பேச்சாளரின் கருத்துக்கள்


டிச.15,2012. இறைவனையும், அவரது வாக்குறுதிகளையும் நம்புவோர் உலகின் கண்களுக்கு ஏமாளிகளாகவும், உலகின் உண்மை நிலைகளை அறியாதவர்கள் போலும் தோன்றினாலும், அவர்கள் உன்னதக் கொடைகளின் மகிழ்வைப் பெறுபவர்களாக இருப்பார்கள் என, திருத்தந்தை வழங்கிய உலக அமைதி நாள் செய்தி கூறுவதாகத் தெரிவித்தார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதெரிக்கோ லொம்பார்தி.
ஒவ்வொரு வாரமும் இத்தாலியத் தொலைக்காட்சியில் வழங்கப்படும் Octava Dies என்ற நிகழ்ச்சியில் உலக அமைதி நாளுக்கான திருத்தந்தையின் செய்தி குறித்து கருத்து வெளியிட்ட அருள்தந்தை லொம்பார்தி, "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற தலைப்பில் திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி, அமைதிக்கான முன் நிபந்தனையாக, மனச்சான்றின் குரல் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது எனக் கூறினார்.
மனித உயிர், திருமணம், மதச் சுதந்திரம், மனச்சான்றின் அடிப்படையில் மறுப்பு கூறும் உரிமைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தையின் செய்தி சுட்டிக்காட்டுவதாகத் திருப்பீடப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்புக்கள், உணவுக்கான உரிமை, பொதுநலனில் அக்கறை கொண்ட வளர்ச்சி, சகோதரத்துவம் போன்றவைகளையும் Octava Dies என்ற வாரத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டினார் இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.