2012-12-14 15:46:35

வியட்நாமில் நடைபெறும் பத்தாவது ஆசிய ஆயர்கள் பொதுக்கூட்டம்


டிச.14,2012. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கூடிய இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் முயற்சியால் உருவான ஆசிய ஆயர்கள் பேரவை தன் 40ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது என்று ஆசிய ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.
டிசம்பர் 11, இச்செவ்வாய் முதல் வருகிற ஞாயிறு முடிய வியட்நாமின் இரு நகரங்களில் நடைபெறும் பத்தாவது ஆசிய ஆயர்கள் பொதுக்கூட்டத்தில் ஆறு கர்தினால்கள், 113 பேராயர்கள், ஆயர்கள் உட்பட 200க்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர்.
வியட்நாமில் இத்தகைய ஒரு கூட்டம் நிகழ்வது தற்போது அந்நாட்டில் உருவாகிவரும் மாற்றங்களைக் குறிக்கிறது என்று வியட்நாமின் திருப்பீடத் தூதர் பேராயர் Leopoldo Girelli கூறினார்.
ஆசியாவின் 350 கோடி மக்களில், 2.9 விழுக்காடு என்ற அளவில் மிகக் குறைந்த சிறுபான்மையினராய் இருக்கும் கத்தோலிக்க மக்கள் தொகை, பல்வேறு சவால்களையும் சந்திக்கின்றது என்று பேராயர் Girelli சுட்டிக் காட்டினார்.
இச்செவ்வாயன்று நிகழ்ந்த துவக்க அமர்வில் வியட்நாம் அரசின் உள்நாட்டுத் துறையின் இணை அமைச்சர் Pham Dung, நாட்டின் முன்னேற்றத்திற்கும், மாற்றங்களுக்கும் வழிவகுத்துள்ள வியட்நாம் தலத்திருஅவையைப் பாராட்டிப் பேசினார்.
வியட்நாமில் கத்தோலிக்க விசுவாசத்தை விதைத்த அயல்நாட்டு மறைபரப்புப் பணியாளர்களுக்கு சிறப்பான நன்றியைக் கூறினார் வியட்நாம் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Peter Nguyen Van Nhon.








All the contents on this site are copyrighted ©.