2012-12-14 15:45:16

திருத்தந்தை - கிறிஸ்து என்ற ஒளியை நினைவுறுத்தும் ஒரு வழிதான் நாம் விளக்குகளால் அலங்காரம் செய்யும் கிறிஸ்மஸ் மரம்


டிச.14,2012. பல நூற்றாண்டுகள் கடந்தபின்னும், கிறிஸ்து என்ற ஒளியின் சக்தி குறையாமல் ஒளிர்கிறது என்பதை நினைவுறுத்தும் ஒரு வழிதான் நாம் ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்யும் கிறிஸ்மஸ் மரம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வேளையில், அங்கு வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம் இவ்வெள்ளி மாலை ஒளியேற்றப்பட்டது.
இத்தாலியின் Pescopennataro ஊரைச் சேர்ந்தவர்கள் இந்தக் கிறிஸ்மஸ் மரத்தை வத்திக்கானுக்குப் பரிசாக அளித்துள்ளனர். இவ்வூரைச் சார்ந்த பிரதிநிதிகளை இவ்வேள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அம்மக்களின் கிறிஸ்தவப் பாரம்பரியத்தைப் புகழ்ந்து பேசினார்.
நம்பிக்கை ஆண்டில் வழங்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரம், புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்திற்கு வருகைதரும் அனைத்து மக்களையும் நம்பிக்கையில் வேரூன்றி வளர அழைப்பதாக என்று கூறியத் திருத்தந்தை, கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.