2012-12-13 16:04:38

மனித வர்த்தகத்தில் 27 விழுக்காட்டினர் குழந்தைகள் - ஐ.நா. வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்


டிச.13,2012. உலகில் நடைபெறும் மனித வர்த்தகத்தில் 27 விழுக்காட்டினர் குழந்தைகள் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்று கூறுகின்றது.
2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு முடிய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலக மனித வர்த்தகத்தில் 27 விழுக்காட்டினர் குழந்தைகள் என்றும், 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு முடிய எடுக்கப்பட்டக் கணக்கைக் காட்டிலும் இது ஏழு விழுக்காடு கூடுதல் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
இவ்வறிக்கையை இப்புதனன்று வெளியிட்ட ஐ.நா. உயர் அதிகாரி Yury Fedotov, இக்கொடூரமான சமுதாயக் குற்றத்தை ஒழிக்க அனைத்து அரசுகளும் மிகத் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
132 நாடுகளில் எடுக்கப்பட்ட இக்கணக்கெடுப்பின்படி, வர்த்தகம் செய்யப்படும் குழந்தைகளில் 20 விழுக்காடு பெண் குழந்தைகள் என்றும், ஆண் குழந்தைகள் 10 விழுக்காட்டு அளவுக்கு வர்த்தகம் செய்யப்படுகின்றனர் என்றும் தெரிகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், மனித வர்த்தகத்திற்கு எதிராக, சட்டங்கள் இயற்றுவதில் அதிக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்றாலும், இக்குற்றங்களைச் செய்வோர் தண்டனைகள் பெறாமல் போவது இக்குற்றத்தை இன்னும் அதிகமாய் வளர்த்துள்ளது என்று ஐ.நா. அறிக்கை கருத்து தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.