2012-12-13 16:01:52

பழங்குடி மக்கள் எழுப்பும் குரல்கள், பிலிப்பின்ஸ் நாட்டின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் குரல்கள் - பிலிப்பின்ஸ் நாட்டு கர்தினால்


டிச.13,2012. மனித குலத்திற்குத் தீமை விளைவிக்கும் வகையில் நாம் மேற்கொள்ளும் முன்னேற்ற முயற்சிகள் உண்மையான முன்னேற்றமாக அமையாது என்று பிலிப்பின்ஸ் நாட்டு கர்தினால் Luis Antonio Tagle கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டில் வாழும் Casiguran என்ற பழங்குடியைச் சார்ந்த மீனவர்களும் ஏனையத் தொழிலாளிகளும் அப்பகுதியில் பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர் அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் முன்னேற்றத் திட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக இம்மக்களின் பிரதிநிதிகள் 120 பேர் பதினைந்து நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, மணிலா பெருநகரை அண்மையில் வந்து சேர்ந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த மணிலாப் பேராயர் கர்தினால் Tagle, பழங்குடி மக்கள் எழுப்பும் குரல்கள் பிலிப்பின்ஸ் நாட்டின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் குரல்கள் என்று கூறினார்.
அமைதி வழியில் போராடும் இம்மக்களுக்குத் தன்னால் இயன்ற அளவு முழு உதவிகளையும் செய்வதாக வாக்களித்த கர்தினால் Tagle, இம்மக்களின் விண்ணப்பங்களை அரசுத் தலைவர் கேட்க மறுத்தால், நாட்டில் உள்ள அனைவரும் இவர்கள் குரலைக் கேட்கும் வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
Casiguran பகுதியில் வாழும் 3000 குடும்பங்களின் பாரம்பரியத் தொழிலுக்கும், அவர்கள் வாழும் நிலங்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் அரசின் இப்புதிய முயற்சியை, கத்தோலிக்க அமைப்புக்களும், ஏனைய மனித உரிமை அமைப்புக்களும் எதிர்த்து வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.