2012-12-13 15:56:51

திருத்தந்தையர்கள் உகாண்டா நாட்டின் மீது அதிகப் பாசம் கொண்டுள்ளனர் - கர்தினால் Filoni


டிச.13,2012. ‘கடவுள் வருகிறார், இதனை உலகுக்குச் சொல்லுங்கள்’ என்ற மையக் கருத்துடன் நாம் கொண்டாடிவரும் திருவருகைக் காலம் நமக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் உள்ள Arua மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள சென்றுள்ள திருப்பீட மறைபரப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni, இவ்வியாழனன்று, நூற்றாண்டு விழா திருப்பலியில் மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
திருத்தந்தையர்கள் ஆறாம் பவுல், அருளாளர் இரண்டாம் ஜான்பால், ஆகியோர் அதிக அன்பு காட்டிய உகாண்டா நாட்டின் மீது, தற்போதையத் திருத்தந்தையும் அதிகப் பாசம் கொண்டுள்ளார் என்பதைத் தன் மறையுரையில் சுட்டிக் காட்டினார் கர்தினால் Filoni.
கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாம், அவர் உலகிற்குக் கொணர்ந்த அன்பு, ஒப்புரவு, நீதி, அமைதி என்ற அனைத்து அம்சங்களையும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் செயல்படுத்துவதே இவ்விழாவுக்கு நாம் செய்யக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பு என்று கர்தினால் Filoni எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.