2012-12-13 15:50:05

டிச.14. திருவருகைக்காலச் சிந்தனை – வழங்குபவர் அருள்திரு இயேசு கருணா


RealAudioMP3 “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.” (லூக்கா 2:10-11)
“குழந்தையின் முகத்தில் அழுகையும், மற்றவரின் முகத்தில் கவலையும் பார்த்திடச் சகியேன்’ என்பார் கலீல் கிப்ரான். இயேசுவின் பிறப்புச் செய்தியை மகிழ்ச்சியின் செய்தியாக வானதூதர்கள் அறிவிக்கின்றனர். மகிழ்ச்சியைப் பொறுத்த வரையில் மனிதர்கள் மூன்று வகை: 1. அரசர் வகை. இவர்கள் மகிழ்ச்சியை முதலில் தங்களில் காண்பார்கள். அதை அடுத்தவர்களுக்கு கொடுப்பார்கள். 2. வணிகர் வகை: பண்டமாற்று முறை போல நான் உனக்கு இதைத் தருகிறேன், நீ அதைத் தா என்று ஒருவர் மற்றவரிடையே மகிழ்ச்சியை பேரம் பேசுபவர்கள். 3. பிச்சைக்காரர் (இரப்பவர்) வகை: என்னிடம் எதுவுமேயில்லை. நீதான் எனக்கு கொடுக்க வேண்டும் என்று தங்கள் மகிழ்ச்சியை மற்றவர்களிடமிருந்து மட்டும் பெற நினைப்பவர்கள். இதில் நாம் எந்த வகை? இரண்டாவதாக, மகிழ்ச்சிக்கும், இன்பத்திற்கும் வித்தியாசம் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். இன்பம் என்பது புறம் சார்ந்தது. மகிழ்ச்சி என்பது அகம் சார்ந்தது. இன்பம் என்பது உடல் சார்ந்தது. மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்தது. இன்பம் என்பது கடந்து போகக் கூடியது. மகிழ்ச்சி என்பது நிலைத்து நிற்கக் கூடியது. இன்பம் ஒருவருக்கு காலப்போக்கில் குற்ற உணர்வை உருவாக்குகிறது. மகிழ்ச்சி நிறைவான எண்ணங்களை மட்டுமே உருவாக்குகின்றது. இந்த வித்தியாசத்தை நாம் உணர்கிறோமா? ஒரு முறை புத்தர் சிலையொன்று பவனியாக எடுத்து வரப்படுகின்றது. திடீரென மழை. சிலையை சாலையில் விட்டுவிட்டு ஓடி ஒளிகின்றனர் மக்கள். மழையில் நனைந்த சிலை மின்னத் தொடங்குகிறது. ஒரே ஆச்சர்யம். ஓடி வந்து பார்க்கின்றனர். சிலையின் களிமண் கரைந்து ஒளிந்திருந்த தங்கச் சிலை வெளிப்படுகின்றது. அப்போதுதான் நினைவுகூர்கின்றனர் முன்பொருநாள் மாற்றாருக்குப் பயந்து தங்கச் சிலைக்குக் களிமண் பூசி மறைத்து வைத்ததை. நம் மகிழ்ச்சி நம்முள் ஒளிந்திருக்கும் தங்கச் சிலை. அதைப் பூசியிருக்கும் களிமண்ணை அகற்ற மழைக்காக காத்திருப்போமா? அல்லது நாமே அகற்றுவோமா? காத்திருப்பதற்கு நாம் உயிரற்ற சிலைகள் அல்ல, உயிருள்ள மனிதர்கள். மகிழ்ச்சி என்ற தங்கச்சிலையை இன்னும் களிமண் மறைக்கலாமா?








All the contents on this site are copyrighted ©.