2012-12-12 15:49:37

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


டிச.12, 2012. கிறிஸ்துப்பிறப்பு விழா நெருங்கி வரும் இவ்வேளையில், வத்திக்கான் பேதுரு வளாகம் இக்கொண்டாட்டங்களுக்காக தனிப்பட்ட விதத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் குடிலும் வேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய தயாரிப்புகளுக்கு ஒத்திணங்கிச்செல்லும் விதமாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டும் இவ்வார புதன் பொது மறைபோதகத்தில் இறைவனின் மீட்புத்திட்டம் குறித்து தன் கருத்துக்களை வழங்கினார்.

நம்பிக்கை ஆண்டு தொடர்புடைய நம் மறைக்கல்விபோதகத்தின் தொடர்ச்சியாக இன்று, கடவுள் இவ்வுகிற்கு தன்னையே வெளிப்படுத்தியது மற்றும் அவரின் மீட்பு திட்டம் குறித்து நோக்குவோம், என தன் புதன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இஸ்ராயேலர்களின் வரலாற்றில் இது எவ்வகையில் வளர்ச்சியடைந்தது என்பது குறித்து திருவிவிலியம் நமக்குக் காட்டுகிறது. குறிப்பாக, விடுதலைப்பயணத்திலும், இறைவனுடன் நாம் கொள்ளும் உடன்படிக்கை உருவாக்கலிலும். இதன் பின்னான நூற்றாண்டுகளில் இஸ்ராயேல் மக்கள் இறைவனின் இந்த மீட்பு நடவடிக்கைகளைத் தங்கள் மனதிற்குள் மகிழ்ச்சியுடன் நினைத்து கொண்டாடி வந்தனர். மேலும், மனித குலம் அனைத்தும் எதிர்நோக்கியிருந்த ஒரு முடிவற்ற புதிய உடன்படிக்கையைக் குறித்து இறைவாக்குனர்கள் வழியாகக் கற்றுக்கொண்டனர். மனித வரலாற்றில் படிப்படியாக உணரப்பட்டு வடிவம் பெற்று வந்த இத்தெய்வீகத்திட்டம், இறைமகன் மனுவுருவெடுத்த இயேசுகிறிஸ்துவின் வருகையில் தன் உச்சநிலையை அடைந்தது. இந்த திருவருகைக்காலத்தில் இறைவனின் மீட்புத்திட்டம் படிப்படியாக வெளியிடப்பட்டது குறித்து ஆழ்ந்து தியானிக்கவும், கிறிஸ்துவில் இறைவன் நம் அருகே நெருங்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளவும் அழைக்கப்படுகிறோம். பெத்லகேம் குடிலை நிறைத்த மகிழ்வு மற்றும் ஒளி நம் வாழ்வின் வழியாக தன் கதிர்களைப் பரப்பி, இறைபிரசன்னத்தை உணர்ந்ததன் சாட்சிகளாக விளங்குவதற்கு, இவ்வுலகின் கவனச்சிதறல்கள், மனக்கலக்கங்கள் மற்றும் மேம்போக்கான நிலைகள் போன்றவைகளின் மத்தியிலும் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வழி நாம் கற்றுக்கொள்வோமாக.

இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.