2012-12-12 15:41:28

டிச.13, 2012. திருவருகைக்காலச் சிந்தனை. வழங்குபவர் அருட்திரு இயேசு கருணா


RealAudioMP3 “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது.” (மத்தேயு 11:28,30)
மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில் நடுவில் புழங்கிய கதை இது: மனிதன் ஒருநாள் காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள் அவனைச் சுற்றி வந்து அவனிடம், ‘நீ சோகமாக இருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள். நாங்கள் உனக்குத் தருகிறோம்’ என்றன. மனிதன், ‘எனக்கு நல்ல கண்பார்வை வேண்டும்’ என்றான். கழுகுää ‘என் பார்வையை உனக்குத் தருகிறேன்’ என்றது. ‘யாரும் எதிர்க்கமுடியாத வலிமை வேண்டும்’ என்றான். ஜகுவார், ‘நான் தருகிறேன்’ என்றது. ‘பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்’ என்றான். பாம்பு, ‘அதை நான் உனக்குக் காட்டுகிறேன்’ என்றது. எல்லா விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தது. எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான். அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, ‘மனிதன் இப்போது எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம், வருத்தம் இருக்காது’ என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக, ‘இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த பூமி சொல்லும்: ‘இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை’. மனிதனின் தேடலை, தேடல் தருகின்ற ஏமாற்றத்தையும், ஏக்கக்தையும், தாகத்தையும், பசியையும், விரக்தியையும் வெளிப்படுத்துகின்ற ஒரு கதை இது. எல்லாவற்றையும் கொண்டு வெற்றிடத்தை நிரப்பத் துடிக்கும் மனிதருக்கு ஒரு நிறைவான வழியைக் காட்டுகின்றார் இயேசு. அவரின் நுகம் அழுத்தாது. அவரின் சுமை எளிதாயிருக்கும்!








All the contents on this site are copyrighted ©.