2012-12-12 16:35:14

ஓரினத் திருமணத்தைச் சட்டமாக்க முயலும் பிரித்தானிய அரசின் செயல்பாடுகள் வெட்கத்தைத் தருகின்றன - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள்


டிச.12,2012. ஓரினத் திருமணத்தைச் சட்டமாக்க முயலும் பிரித்தானிய அரசின் செயல்பாடுகள் மக்களின் எண்ணங்களுக்கு எதிராகவும், வெட்கத்தைத் தருவதாகவும் அமைகிறது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் சட்ட வரைவு இப்புதனன்று பாராளு மன்றத்தில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், ஓரினத் திருமணத்தை எதிர்த்து 600000 பிரித்தானிய மக்கள் கையெழுத்திட்டு அனுப்பிய விண்ணப்பம் எவ்வகையிலும் கருத்தில் கொள்ளப்படாதது வேதனையைத் தருகிறது என்று ஆயர்கள் இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் சட்டம் உருவாக்கப்படுவதற்கு வரையறுக்கப்பட்ட வழிகளைச் சரிவரக் கடைபிடிக்காமல், இம்முறை பிரித்தானிய அரசு நடந்துகொள்ளும் முறை நாட்டின் சட்டங்களுக்கும், மக்கள் எண்ணங்களுக்கும் எதிராகச் செல்கிறது என்று ஆயர்கள் சார்பில் பேசிய பேராயர் Vincent Nichols மற்றும் பேராயர் Peter Smith இருவரும் கூறினர்.
ஓரினத் திருமணம் சட்டமயமாவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை மட்டுமல்லாமல், ஆங்கலிக்கன், எவன்ஜெலிக்கள் சபைகளும், யூதர்கள், இஸ்லாமியக் குழுக்களும் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.