2012-12-12 16:36:30

ஐந்துலட்சம் ஆண்டுகளுக்குமுன் புதையுண்ட அண்டார்டிகா ஏரியில் ஆய்வு


டிச.12,2012. அண்டார்டிகா என்றழைக்கப்படும் தென்துருவத்தில், உறைபனிக்கு கீழே சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் புதையுண்டுபோன மிகப்பெரிய ஏரியில் ஏதாவது உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வதற்காக பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழக பேராசிரியர் மார்டின் சீகர்ட் (Martin Siegert) தலைமையிலான 12 அறிவியலாளர்கள் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஏறக்குறைய பதினாறு ஆண்டுகால திட்டமிடலுக்குப்பிறகு இக்குழுவினர் தற்போது அண்டார்டிகாவின் உறைபனியில் தங்கி தங்களின் ஆய்வுகளைத் துவக்கியுள்ளனர்.
அண்டார்டிகாவின் உறைபனிக்கு கீழே 3.2 கிமீ ஆழத்தில் புதையுண்டிருக்கும் Ellsworth எனப்படும் இந்த ஏரி, சுமார் 14 கிலோ மீட்டர் நீளம், 3 கிலோமீட்டர் அகலம் 160 மீட்டர் ஆழம் கொண்டதாக இருக்கிறது.
சுமார் 5 லட்சம் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாத இருண்ட ஏரியில் இருக்கும் இந்த தண்ணீரில் ஏதாவது உயிரினம் வாழ்கிறதா என்பதை கண்டறிவது தான் இந்த ஆய்வின் பிரதான நோக்கம் என்கிறார் இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் பேராசிரியர் Martin Siegert.
இந்த ஆய்வின் முதல் சவால், ஏரியை மூடியிருக்கும் மூன்று கிலோமீட்டர் அடர்த்தியான உறைபனியை உடைப்பது. அப்படி உடைக்கப் பயன்படுத்தும் இயந்திரங்கள் அதிகபட்ச சுத்தமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த உபகரணங்களில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் எல்ஸ்வொர்த் ஏரித்தண்ணீரை மாசுபடுத்திவிடும் ஆபத்திருக்கிறது.
இந்த ஏரித்தண்ணீர் மற்றும் அதன் சகதிகளில் கண்டிப்பாக நுண்ணுயிரிகள் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு இருந்தால், நுண்ணுயிர்களின் உயிர்வாழும் தன்மை குறித்த புதிய புரிதலை இது மனித இனத்துக்கு அளிக்கும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.








All the contents on this site are copyrighted ©.