2012-12-11 15:54:27

டிசம்பர், 12, திருவருகைக்காலச் சிந்தனை - அருள்பணி. இயேசு கருணா


RealAudioMP3 “ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார்.” (எசாயா 40:31)விவிலியத்தில் எனக்கு மிகவும் பிடித்த உருவகம் இந்த உருவகமே – கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர். வாழ்வில் நிகழ்வுகள் என் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகச் செல்லும்போதும், வாழ்வின் நிகழ்வுகள் என் அமைதியைக் குலைக்கும்போதும், நான் செல்கின்ற பாதை தெளிவாக இல்லாத போதும் நான் நினைத்துக்கொள்ளும் உருவகம் இதுதான். கழுகு கற்பிக்கின்ற பாடமும் இதுதான். புயல்காற்று வீசும்போது எல்லாப் பறவைகளும் தம் கூடுகளுக்குள் சென்று பதுங்கிக்கொள்ளும். ஆனால் கழுகு மட்டும்தான் புயல்காற்றில் நேருக்கு நேர் பறக்கும். புயல்காற்று கழுகை இன்னும் உயரமாக பறக்க வைக்கும். கழுகின் பார்வை விரிவடையும். எந்த ஒரு பொருளும் அதன் கவனத்தைச் சிதைக்க முடியாது. புயல்காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி அது 80 முதல் 100 மைல் வேகத்தில் பறக்கத் தொடங்கும். அது பறக்க, பறக்க அதன் இறக்கைகள் அதிக வலுப்பெறுகின்றன. பாபிலோனியாவின் பார்வைக்கு எருசேலம் தரைமட்டம் ஆனதுபோல் தோன்றினாலும், அந்தத் தோல்வியும், சாம்பலும் எருசலேமை இன்னும் உயர்த்தும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார் இறைவாக்கினர் எசாயா. வாழ்வில் துன்ப மேகங்கள் சூழ்ந்து புயல்காற்றாய் வீசும்போது நாம் கழுகை நினைவில் கொள்வோம். கழுகுகள் போல் நாமும் சிறகு விரித்து உயரே செல்வோம்.







All the contents on this site are copyrighted ©.