2012-12-07 16:09:51

திருத்தந்தை - புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் இறையியல் வல்லுனர்களின் பங்களிப்பு முக்கியம்


டிச.07,2012. நம்பிக்கை ஆண்டில் திருஅவை மேற்கொண்டுள்ள புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் இறையியல் வல்லுனர்களின் பங்களிப்பு முக்கியம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
2012ம் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை முடித்திருந்த அகில உலக இறையியலாளர் குழவின் உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, நம்பிக்கை ஆண்டையொட்டி இறையியலாளர்கள் வெளியிட்டுள்ள சிறப்பானச் செய்தியைப் பாராட்டிப் பேசினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின், கத்தோலிக்க இறையியல் எண்ணங்கள் பன்முகக் கண்ணோட்டம் கொண்டு வளர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்செல்ல இறையியல் வகிக்கும் இன்றியமையாத பங்கையும் எடுத்துரைத்தார்.
மக்களின் விசுவாச உணர்வுகள் வழியே தூய ஆவியார் இன்னும் பல வழிகளில் பேசி வருகிறார் என்பது உண்மையாயினும், இந்த விசுவாச உணர்வுகளில் உண்மையானவை எவை என்றும், போலியானவை எவை என்றும் அறிவது முக்கியம் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
ஆண்டு இறுதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் புனித Mary Major என்ற அன்னையின் பசிலிக்காப் பேராலயத்திற்கு நடைபயணம் மேற்கொண்டதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அன்னையின் பாதுகாப்பில் அனைத்து இறையியலாளர்களும் வளரவேண்டும் என்ற தன் அசீரையும் அவர்களுக்கு அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.