2012-12-05 15:50:53

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


டிச.05, 2012. கிறிஸ்துப்பிறப்பு விழாவைக் கொண்டாடுவதற்கு முன்னான தயாரிப்புகளின் காலமான திருவருகைக்காலத்தின் முதல் புதனன்று திருப்பயணிகளை சந்தித்த திருத்தந்தை, திருவருகைக்காலத்தின் சிறப்புக்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த 'நம்பிக்கை ஆண்டில்' நம் மீட்பு குறித்த இறைத்திட்டத்தின் மகத்துவத்தை ஆழ்ந்து சிந்தித்து திருவருகைக்காலத்தைத் துவக்குவோம் என தன் இவ்வார புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இறைவனின் சொந்த பிள்ளைகளாக நாம் மாறும் வண்ணம், உலகம் தோன்றுவதற்கு முன்னரே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் என புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தின் துவக்கத்தில் வாசிக்கின்றோம். இத்திருமுகத்தின் இப்பகுதி, இறைவனின் கருணைமிகு அன்பை புகழ்ந்து பாடுகின்றது. காலநிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்க்கவேண்டும் என்பதே இறைவனின் திட்டமாகும். இறைவன் தன் இத்திட்டங்களை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியுள்ளார். இறைமகனின் மனித பிறப்பிலும் தூய ஆவியை பொழிந்ததிலும் அவ்வெளிப்பாடுகள் உச்ச நிலையை அடைந்தன. இறைவன் தன் மகன் இயேசுவில் தன்னை வெளிப்படுத்தியது நம் நம்பிக்கைகள் மற்றும் ஏக்கங்களோடுத் தொடர்புடையது. அதேவேளை நாம் விசுவாசத்தின் கீழ்ப்படிதலில் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெய்வீக வெளிப்பாடுகளுக்கு நம் மனது மற்றும் விருப்பத்தின் சுதந்திர இசைவாக, நம் வாழ்வு மற்றும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகின் உண்மைநிலைகளை புதிய வழிகளில் காண்பதற்கு உதவும் மனமாற்றத்திற்கு விசுவாசம் அழைப்புவிடுக்கிறது. இத்திருவருகைக்காலத்தில், இறைவனின் அன்புதிட்டத்தின் உள்ளழகைக் குறித்து மேலும் ஆழமாகத் தியானிப்போமாக. அதேவேளை, இவ்வுலகில் இறைவனின் மீட்புத் தொடர்புடைய இருப்பின், வாழும் அடையாளமாக இருக்க முயல்வோமாக, என உரை வழங்கினார் திருத்தந்தை.
காங்கோ சனநாயகக்குடியரசின் கிழக்குப்பகுதியின் மனிதகுல நெருக்கடி குறித்தக் கவலைநிறைச் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன என்ற கவலையை தன் பொதுமறைபோதகத்தின் இறுதியில் வெளியிட்ட திருத்தந்தை, சில மாதங்களாக இவ்விடம் ஆயுத மோதல்கள் மற்றும் வன்முறைகளின் இடமாக மாறி வந்துள்ளது என்றார். நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு போதிய உதவிகள் இல்லா நிலையிலும், பலர் தங்கள் உறைவிடங்களைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையிலும், பேச்சுவார்த்தை மற்றும் ஒப்புரவிற்கான என் விண்ணப்பத்தை முன்வைக்கிறேன். துன்புறும் இம்மக்களுக்கான உதவிகளை ஆற்றுமாறு அனைத்துலக சமுதாயத்திற்கும் அழைப்பு விடுக்கின்றேன். இவ்வாறு தன் பொதுமறைபோதகத்தை நிறைவுச்செய்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.