2012-12-05 16:12:42

அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி பேராயர் Zygmunt Zimowski வெளியிட்ட செய்தி


டிச.05,2012. உலகின் உரிமைகள் அனைத்தும் சக்திவாய்ந்தவர்களுக்கும், வெற்றி பெறுபவர்களுக்கும் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள தனிச்சொத்து ஆக முடியாது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 3, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி நலப்பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறினார்.
உடலாலும், மனதாலும் பல்வேறு தடைகளைச் சந்தித்துவரும் மாற்றுத் திறனாளிகளுக்குத் திருஅவை தனிப்பட்ட அர்ப்பணிப்பை அளித்து வந்துள்ளது என்று பேராயர் Zimowski தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் மனித சமுதாயத்தில் முழுமையாக இணைக்கப்படுவதற்கு ஒவ்வொரு நாடும் பெரும் நிதியை ஒதுக்கவேண்டியிருந்தாலும், அனைத்து நாடுகளும் நிறைவேற்ற வேண்டிய ஒரு முக்கியக் கடமை இது என்று பேராயர் Zimowski தன் செய்தியில் வலியுறுத்தினார்.
உலகெங்கும் 100 கோடிக்கும் அதிகமானோர், அதாவது உலகின் மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் உடல் மற்றும் மனக் குறைகள் உள்ளவர்கள் என்றும், இவர்களில் 20 கோடிக்கும் அதிகமானோர் இக்குறைகளால் பெரும் துயர்களைச் சந்திக்கின்றனர் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.