2012-12-04 15:47:42

திருவருகைக்காலச் சிந்தனை - அருள்பணி. இயேசு கருணா


RealAudioMP3 “படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார். அதில் சுவைமிக்க பண்டங்களும்ää பழரசப் பானமும்,கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.” (எசாயா 25:6)
மெசியா தரும் விருந்தை முன்னுரைக்கின்றார் இறைவாக்கினர் எசாயா. இந்த இறைமொழியை வாசிக்கும்போது அதில் வெளிப்படுவது இறைவனின் தாய்மையும், இறைவனின் நிதானமும். பண்டம், பானம், இறைச்சி, திராட்சை இரம் என உணவுப்பட்டியிலை வாசிக்கும் இறைவாக்கினர் ஒவ்வொன்றிற்கும் ‘சுவைமிக்க’, ‘கொழுப்பான’, ‘பக்குவப்படுத்திய’ என பெயரெச்சங்களைச் சேர்க்கின்றார். இதில் தான் இறைவின் நிதானம் வெளிப்படுகின்றது. இறைவன் தரும் விருந்து ஏதோ ஓரிரு நிமிடங்களில் தயாரிக்கப்படும் ‘இன்ஸ்டன்ட்’ உணவு அல்ல. மாறாக, தன் அன்பைக் கலந்து நிதானமாகத் தயாரிக்கப்படும் ஆசை விருந்து. இந்த வித்தியாசம்தான் நாம் வீட்டில் சாப்பிடுவதிலும், ஓட்டலில் சாப்பிடுவதிலும் உள்ளது. ஓட்டலில் வியாபாரம். வீட்டில் தாய்மை. ஓட்டலில் வேகம். வீட்டில் நிதானம். ஆனால் இன்று நம் வாழ்க்கை உணவிலிருந்து அனைத்தும் ‘இன்ஸ்டன்ட்’ என ஆகிவிட்டது. கடந்த ஆண்டு ‘அவசரம்’ என்ற குறும்படம் வெளியானது. மும்பை நகரின் பரபரைப்பைக் காட்டுகின்ற படம். ஒரு பெண் குளித்து, சரியாகத் துவட்டாத தலையுடன் வேகமாக லோக்கல் ட்ரைனைப் பிடிக்க ஓடிவார். எப்படியோ கூட்டத்தைச் சமாளித்து ஏறிவிடுவார். சுற்றிலும் பார்ப்பார். யாரும் இறங்குவதாகத் தெரியவில்லை. செல்போன், நியூஸ்பேப்பர் என்ற எல்லாரும் மும்முரமாயிருக்கின்றார்கள். ஒரு ஸ்டேஷனில் நிறையப் பேர் இறங்க,ஓடிப்போய் ஒரு இடம் பிடித்து அமர்ந்து கொள்கின்றார். இறங்குவதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்றெண்ணி டிபன் பாக்ஸை எடுக்கின்றார். திறக்க முடியவில்லை. சூடாக மூடியதால் மூடி இறுகிவிட்டது. சுற்றிலும் பார்க்கின்றார். யாரும் உதவுவதுபோல் தெரியவில்லை. பல்லால் கடித்துத் திறக்க முயல்கின்றார். அந்தநேரம் ட்ரைய்ன் திடீரென்று நிற்க டிபன் பாக்ஸ் கீழே விழுந்து சோறு கொட்டிவிடுகின்றது. தன் உடை, காலணிகள் என்று எல்லா இடமும் சாம்பார். அப்போதும் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. மெதுவாக டிபன் பாக்ஸை மூடிவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்கின்றார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி ஓடவேண்டும். ஓட்டலுக்குச் செல்ல நேரம் இருக்காது. கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறது. குறும்படம் இந்த வரிகளோடு நிறைவடையும்: ‘நாம் செய்கின்ற வேலையினால் நிம்மதியாக ஒரு கையளவு உணவு கூட சாப்பிட முடியவில்லையென்றால், எதற்காக அந்த வேலை? எதற்காக அந்த அவசரம்?’








All the contents on this site are copyrighted ©.