2012-12-04 15:07:51

38 ஆண்டுகளுக்கு பின் தலித் மாணவர்கள் கல்வி நிலை குறித்து ஆய்வு


டிச.04,2012. தலித் மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆய்வுசெய்யும் பணி, 38 ஆண்டுகளுக்குப் பின், இந்தியா முழுவதும் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் உள்ள, தலித் மாணவர்களின் கல்வி நிலை குறித்த ஆய்வை,. தலித் பிரிவினர் அதிகளவில் உள்ள, அரியானா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட, 15 மாநிலங்களில் உள்ள, பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம், மத்திய அரசின், இந்திய சமூக அறிவியல் ஆய்வு குழு மேற்கொள்கிறது. தமிழக அளவிலான ஆய்வை, சென்னை பல்கலைக் கழக, பொருளியல் துறை மேற்கொள்கிறது.
ஒதுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறுவதில் உள்ள சிக்கல்கள், கல்வி மூலம் தலித் மக்களின் வாழ்க்கை ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தலித் மக்களுக்கு கல்வி பரவலாக்க உள்ள தடைகள், தலித் மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் கல்வி பெறுவதில் உள்ள முரண்பாடுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
தலித் மாணவர்களின் கல்வி நிலை குறித்து, 1974-75ம் ஆண்டு மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வின் முடிவை அடிப்படையாக வைத்து, தலித் மாணவர்களுக்கு முழுமையாக கல்வி சேரவும், மாணவர்களின் கல்வி நிலையை உயர்வதற்கும் பல்வேறு திட்டங்களை அரசு வகுத்ததைத் தொடர்ந்து, தற்போது, 38 ஆண்டுகள் கழிந்து மறுபடியும், 2012-2013ம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.