2012-12-03 16:25:03

டுவிட்டரில் (Twitter) திருத்தந்தை


டிச.03,2012. நவீன சமூகத்தொடர்புசாதனங்களில் திருஅவையின் இருப்பை வலியுறுத்தும் விதமாக இணையதள டுவிட்டர் (Twitter) பக்கத்தில் திருத்தந்தை நேரடியாக கலந்துகொள்ளும் பகுதி ஒன்று திறக்கப்படும் என திருப்பீடப் பத்திரிகையாளர் கூட்டத்தில் இத்திங்களன்று அறிவிக்கப்பட்டது.
சமூகத்தொடர்புகளுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் கிளவ்தியோ மரிய செல்லி, திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி உட்பட பல்வேறு முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் கூட்டத்தில், நவீன சமூகத்தொடர்பு தொழில்நுட்பத்தில் திரு அவையின் இருப்பை வலியுறுத்தும் விதமாகவே டுவிட்டரில் திருத்தந்தையின் இருப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
குவாதாலூப்பே நமதன்னை திருவிழா இடம்பெறும் இம்மாதம் 12ம் தேதி திருத்தந்தையின் டுவிட்டர் பக்கம் துவக்கப்படும் என்ற திருப்பீட அதிகாரிகள், அதற்கு முன், மக்கள் திருத்தந்தையை நோக்கி விசுவாசம் மற்றும் நம்பிக்கைகள் குறித்த கேள்விகளை டுவிட்டரில் அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலம், இஸ்பானியம், இத்தாலியம், போர்த்துக்கீசியம், செர்மன், போலந்து, அராபியம், ஃப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் மக்கள் டுவிட்டரில் தங்கள் கேள்விகளை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மொழிகள் பின்னர் சேர்க்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.







All the contents on this site are copyrighted ©.