2012-12-01 14:38:30

முதல் இந்தியப் பொதுநிலையினர் ஒருவர் முத்திப்பெற்றநிலைக்கு உயர்த்தப்படவுள்ளார்


டிச.01,2012. இந்தியாவின் பொதுநிலையினரில் முதல் மறைசாட்சி இறை ஊழியர் தேவசகாயம், இஞ்ஞாயிறன்று தமிழ்நாட்டின் நாகர்கோவில் கார்மேல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் முத்திப்பெற்றநிலைக்கு உயர்த்தப்படவுள்ளார்.
திருப்பீட புனிதர் பட்டமளிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த முத்திப்பெற்றநிலை அறிவிப்புத் திருப்பலியில், இந்தியாவின் அனைத்துக் கர்தினால்கள், நாடு முழுவதிலிமிருந்து 50க்கும் அதிகமான ஆயர்கள், 500க்கு அதிகமான அருள்பணியாளர்கள், 1,500க்கும் அதிகமான அருள்சகோதரிகள் உட்பட ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுநிலையினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கோட்டாறு ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் கூறினார்.
இந்த நிகழ்வு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த ஆயர் ரெமிஜியுஸ், இந்த நம்பிக்கை ஆண்டில் இந்த அறிவிப்பு ஒரு கொடை என்று கூறினார்.
1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தில் இந்துக் குடும்பத்தில் பிறந்த நீலகண்டன் பிள்ளை, திருவிதாங்கூர் அரசவையில் முக்கிய பணியாற்றி வந்தார். கிறிஸ்தவராக மனம் மாறிய பின்னர் தேவசகாயம் என்ற பெயரை ஏற்றார். கிறிஸ்தவராக மனம் மாறியதால், பல கொடுந்துன்பங்களுக்குப் பின்னர் 1752ம் ஆண்டு சனவரி 14ம் நாளன்று ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.