2012-12-01 15:11:27

டிசம்பர் 02, திருவருகைக் காலம் - முதல் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இளம்தாய் ஒருவர் தன் 5 வயது மகனுடன் கடைவீதிக்குச் சென்றார். கிறிஸ்மஸ் கூட்டம் அலைமோதியது. கிறிஸ்மசுக்குத் தேவையான பொருட்களின் பட்டியல் ஒரு கையில், மற்றொரு கையில் மகன் என்று அந்த இளம்தாய் கடை, கடையாக ஏறி இறங்கினார். இறுதியில், எல்லாப் பொருட்களையும் சுமந்துகொண்டு கடைவீதியில் நடந்துகொண்டிருந்தவர் திடுக்கிட்டு நின்றார். தன்னுடன் வந்துகொண்டிருந்த மகனைக் காணவில்லை. பதைபதைப்புடன் அவர் மீண்டும் கடைக்குள் சென்றார். அங்கு கடையில் அலங்காரமாய் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்து பிறப்பு காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவரது மகன். அவனைக் கண்டதும், தாய் கோபத்தில் கத்தினார். சிறுவனோ, அவரது கோபத்தை சற்றும் உணராமல், "அம்மா இங்க பாருங்க. குழந்தை இயேசு எவ்வளவு அழகா..." என்று ஆர்வமாய் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்லவந்ததைச் சற்றும் கேளாமல், "அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்ல" என்று சொல்லியபடி, அவனைத் 'தரதர'வென இழுத்துக் கொண்டு நடந்தார்.
'அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல' என்று அந்த இளம்தாய் சொன்னது நம்மையெல்லாம் தூக்கத்திலிருந்து விழித்தெழச் செய்யும் ஓர் அழைப்பு... இதை ஓர் எச்சரிக்கை என்று கூடச் சொல்லலாம்.

இந்தக் கதையைத் தொடர்ந்து கற்பனை செய்து பார்ப்போமே! அந்த இளம்தாயின் ஒரு கையில் இரண்டு அல்லது மூன்று பைகள்... பைகள் நிறையப் பொருட்கள். மற்றொரு கையில் அந்தச் சிறுவனைப் பிடித்து இழுத்த வண்ணம் ஓடுகிறார் அவர். தாயின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், கூடவே ஓடிக் கொண்டிருக்கும் சிறுவனுக்கு ஒரே குழப்பம். கடந்த சில நாட்களாக மூச்சுக்கு மூச்சு 'கிறிஸ்மஸ் வருது, கிறிஸ்மஸ் வருது' என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறான் சிறுவன். அந்தக் கிறிஸ்மசுக்குக் காரணம் குழந்தை இயேசு என்பதையும் அம்மா கதையாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறான் அவன். இன்று அந்தக் குழந்தை இயேசுவைப் பார்க்கக்கூட நேரமில்லாமல், அம்மாவுக்கு ஏன் இந்த அவசரம் என்பதே அச்சிறுவனின் குழப்பம்.
குழம்பிப் போயிருக்கும் அந்தச் சிறுவனைப் போலத்தான் நாமும்... பல வண்ண விளக்குகளாலும், பொருட்களாலும் குவிந்து கிடக்கும் கடைவீதிதான் இவ்வுலகம். இக்கடைவீதியில் நாமும் அவசரமாக இழுத்துச் செல்லப்படுகிறோம். ஏன் இந்த அவசரம், எங்கு போகிறோம் என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். கிறிஸ்மஸ் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நேரமே இல்லாமல், கடைவீதிக் கூட்டத்தில் காணாமற் போகிறோம். இந்த அவசரத்தில், ஆரவாரத்தில் நாம் தொலைந்து போகாமல் இருக்கவே, திருஅவை நமக்கு ஓர் அழகிய நேரத்தை, காலத்தை ஒதுக்கியுள்ளது. இன்று துவங்கி, டிசம்பர் 24ம் தேதி இரவு வரை நமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அழகிய காலம்தான்... திருவருகைக் காலம்.

எந்த ஒரு விழாவாக இருந்தாலும் சரி, அந்த விழாவைவிட, அதற்கான ஏற்பாடுகள், எதிர்பார்ப்புகள் நம்மை அதிகம் கவர்கின்றன. நல்லது ஒன்று நடக்கப்போகிறது, நல்லது ஒன்றில் பங்கேற்கப்போகிறோம் என்ற எண்ணம் இந்தத் துடிப்பை, ஆர்வத்தை உண்டாக்குகிறது. இந்த ஆர்வத்தை, எதிர்பார்ப்பை உருவாக்கும் காலம்... திருவருகைக் காலம். பெரும்பாலும் ஆனந்தமான எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கும் காலம் இது. ஆனால், இன்றைய நற்செய்திப் பகுதி ஆனந்தத்திற்குப் பதிலாக, அச்சத்தை உருவாக்குகிறது.
இரு வாரங்களுக்கு முன் உலக முடிவு பற்றி மாற்கு நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியை சிந்தித்தோம். இன்று லூக்கா நற்செய்தியிலிருந்து மீண்டும் உலக முடிவு பற்றி ஒரு வாசகம்.
திருவருகைக் காலம் ஆரம்பமாகியிருக்கிறது. இன்றே முடிவைப்பற்றி நமது நற்செய்தி கூறுகிறது. ஆரம்பத்திலேயே, முடிவா? அதுவும் இப்படி ஒரு முடிவா? ஆரம்பத்திலேயே முடிவைத் தெரிந்துகொண்டால், அதற்கேற்றதுபோல் நடந்துகொள்ளலாமே! எதிர்நோக்குவது பயங்கரமான முடிவு என்றால், அதைச் சந்திக்க மனதை உறுதிப்படுத்திக் கொள்ளலாமே! இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டிருப்பது நம் சொந்த வாழ்வின் முடிவு மட்டுமல்ல... இவ்வுலகத்தின் முடிவு.
லூக்கா நற்செய்தி 21: 25-28; 34-36
அக்காலத்தில் மானிட மகன் வருகையைப் பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது:கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.

நாம் சந்திக்கப் போவது பயங்கரமான முடிவு என்றால், அதற்கு இருவகையில் பதில் சொல்லலாம். ஒன்று, பதுங்கி ஒளியலாம். அல்லது, துணிவுடன் எதிர்கொள்ளலாம். இப்படி எதிர்கொள்வதிலும் இரு வகை... ஒன்று, அந்தப் பயங்கரச் சூழலைப் 'பல்லைக் கடித்துக் கொண்டு' தாங்கிக் கொள்ளலாம். அல்லது, அந்த பயங்கரத்திலும் பயனுள்ள அர்த்தங்களைக் கண்டுபிடித்து, அவற்றிற்குச் செயல்வடிவம் கொடுக்கலாம். கடல் கொந்தளிப்பு, கலகம், குழப்பம், அச்சம் என்று பயம்தரும் ஒரு பட்டியலைத் தரும் இயேசு, அந்நேரத்தில் என்ன செய்யச் சொல்கிறார்? பதுங்கி ஒளியச் சொல்லவில்லை... தப்பித்து, தலைதெறிக்க ஓடச் சொல்லவில்லை... மாறாக, தலை நிமிர்ந்து நிற்கச் சொல்கிறார். காரணம்? இதன் பெயர் அழிவல்ல, இதுதான் மீட்பு என்பதால்... நாம் காணும் கண்ணோட்டம், நம் எண்ணங்களை மாற்றும்... நம் செயல்பாடுகளை மாற்றும்.
அழிவு என்று பார்த்தால், அலறி அடித்து ஓடத்தான் வேண்டும். மீட்பு என்று பார்த்தால், தலை நிமிர்ந்து நிற்போம், நம் கடவுளைச் சந்திக்க... தப்பிப்பதற்குப் பதில், தஞ்சம் அடைவோம் அந்த இறைவனில். கண்ணோட்டம் செயல்பாடுகளை மாற்றும்.

அழிவு, அவநம்பிக்கை இவற்றிற்கு அடிக்கடி சொல்லப்படும் எடுத்துக்காட்டுகள் இரண்டாம் உலகப் போரில் நடைபெற்ற அக்கிரமங்கள்... முக்கியமாக, யூத இனத்தை வேரோடு அழிக்க உருவாக்கப்பட்ட நாத்சி வதை முகாம்கள். ஆனால், அதே வதை முகாம்கள் நம்பிக்கை தரும் நல்ல பாடங்களைக் கற்றுத்தரும் பள்ளிகளாகவும் மாறின. நாத்சி வதை முகாம்களைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள், திரைப்படங்கள் உள்ளன. 90களில் வந்த இரு திரைப்படங்களின் கதை நாம் இப்போது சிந்திக்கும் மீட்புக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
"வாழ்க்கை அழகானது" (Life is Beautiful) என்ற தலைப்பில் வெளியான படம், நாத்சி வதை முகாமிற்கு இழுத்து செல்லப்படும் ஒரு சிறு குடும்பத்தைப் பற்றியது. தந்தை, தாய் ஒரு நான்கு வயது சிறுவன். தாய் தனியே அடைக்கப்படுகிறார். சிறுவன் தந்தையுடன் தங்கவேண்டிய கட்டாயம். நடப்பது என்ன என்று அறியாமல் இருக்கும் அந்தச் சிறுவனிடம், அந்த வதை முகாமில் நடக்கும் ஒவ்வொரு பயங்கரச் செயலுக்கும் தந்தை வித்தியாசமான விளக்கம் தருகிறார். அவர்கள் வந்திருப்பது ஒரு விளையாட்டிற்காக என்று தன் கற்பனைக் கதையை ஆரம்பிக்கிறார்... திரும்பவும் வீட்டுக்குப் போகவேண்டுமென சிறுவன் அடம் பிடிக்காமல் இருந்தால் 20 புள்ளிகள் பெறலாம், பசிக்கிறதென்று அழாமல் இருந்தால், 10 புள்ளிகள் பெறலாம்... என்று தந்தை தன் நான்கு வயது சிறுவனிடம் கற்பனைக கணக்கொன்றைச் சொல்லி அவனை அந்த முகாமில் தங்கவைப்பது மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிகளெல்லாம் பெற்றால்...? ஒரு இராணுவ Tank பரிசாகக் கிடைக்கும் என்று தந்தை சொல்லும் கனவு, அச்சிறுவனைக் காப்பாற்றுகிறது.
திரைப்படத்தின் இறுதியில், மகனை ஓரிடத்தில் ஒளித்துவைத்துவிட்டுத் திரும்பும் தந்தை, ஜெர்மானிய வீரர்களால் பிடிபடுகிறார். மறைவிலிருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் மகன் என்பதை உணரும் தந்தை, அவனுக்கு முன் வீரநடை போட்டு வீரர்களுடன் செல்கிறார். ஒரு தெரு முனையில் சுட்டுக் கொல்லப்படுகிறார். தந்தை இறந்ததைக்கூட அறிந்துகொள்ளாமல் அச்சிறுவன் அடுத்த நாள் காலை மறைவிடத்திலிருந்து வெளியே வருகிறான். அந்தநாள் காலையில், ஜெர்மனி வீழ்ந்ததால், அமெரிக்கப் படையினரின் இராணுவ Tank அந்த முகாமுக்குள் வருகிறது. அதைக் காணும் சிறுவன், அப்பா சொன்னதுபோல உண்மையிலேயே தனக்கு Tank பரிசாகக் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் கூச்சலிடுகிறான். கதை முடிகிறது.

இதைப்போலவே, நம்பிக்கைச் செய்தியைத் தாங்கி வந்த மற்றொரு திரைப்படம்... "பொய் சொல்லும் ஜேக்கப்" (Jakob the Liar). ஜேக்கப் என்ற யூத இனத்தைச் சார்ந்த ஒரு கடைக்காரர், ஜெர்மானியர்களால் பிடிபட்டு நாத்சி வதை முகாமில் தள்ளப்படுகிறார். அவர் அங்கு சேரும்போது, அந்த முகாமில் பலர் தற்கொலை செய்துகொண்டதை அறிகிறார். விளையாட்டாக, அவர் ஒரு ரேடியோவில் தான் கேட்டதாக ஒரு செய்தியைக் கூறுகிறார். அதாவது, இன்னும் சில நாட்களில் ஜெர்மானியப் படைகள் தோற்கடிக்கப்படும் என்ற செய்தி அது. அந்த ரேடியோ எங்குள்ளதெனக் கேட்கும் எல்லாரிடமும் அது ஒரு பெரிய ரகசியம் என்று மட்டும் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் ஜெர்மானியப் படைகளின் தோல்வியைப் பற்றி பல கதைகளைச் செய்திகளாகச் சொல்லிவருகிறார் ஜேக்கப். அவர் கூறும் செய்திகள் பலருக்கு நம்பிக்கை தருவதால் அந்த முகாமில் தற்கொலைகள் நின்று போகின்றன. ஜெர்மானிய அதிகாரிகள் இந்த ரேடியோ பற்றி கேள்விப்பட்டு, ஜேக்கப்பைப் பிடித்து, சித்ரவதை செய்கின்றனர். இறுதியில் ஜேக்கப் கொல்லப்படுகிறார். ஆனால், அவர் கற்பனையில் உருவாக்கிய அந்த ரேடியோ, அதன் வழியாகச் சொன்ன நம்பிக்கை தரும் செய்திகள் பலரையும் தற்கொலையிலிருந்து காப்பாற்றுகிறது.

அன்பர்களே, நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்த நல்ல பல சம்பவங்களை, மேற்கோள்களை இத்திருவருகைக் காலம் முழுவதும் பகிர்ந்து கொள்வோம். நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை இன்னும் அதிகமாகப் பரப்ப முயல்வோம்.
ஐ.நா.பொது அவையில் நவம்பர் 29, கடந்த வியாழனன்று எடுக்கப்பட்ட ஓர் அழகிய முடிவு நம் நம்பிக்கைச் செய்திகளை ஆரம்பித்து வைக்கிறது. வன்முறைகளால் காயப்பட்டு கிடக்கும் புனித பூமியின் ஒரு பகுதியான பாலஸ்தீனம் உலகின் 194வது நாடாக ஐ.நா.அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமைதியின் இளவரசன் இயேசு பிறந்து, வளர்ந்த அந்தப் புனித பூமியில் நிகழ்ந்துவரும் அரக்கத்தனமான அடக்குமுறைகள், இனியாகிலும் முடிவுக்கு வருவதற்கு, ஐ.நா.அவையின் இந்த முடிவு ஆரம்ப முயற்சியாக அமையட்டும்.

இரண்டாவதாக, நாம் மகிழும் ஒரு செய்தி... இஞ்ஞாயிறன்று தமிழ்நாட்டின் கோட்டாறு மறைமாவட்டத்தில் தேவசகாயம் பிள்ளை என்ற இறையடியார் முத்திப்பேறு பெற்றவர் –அருளாளர்- என்று உயர்த்தப்படுகிறார். 18ம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணிலேயே மறைசாட்சியாக இறந்த தேவசகாயம் பிள்ளை ஓர் அருளாளராக உயர்த்தப்படுவது இதுவரை இந்திய மண்ணில் நிகழ்ந்திராத ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் பரிந்துரையால், நாமும் இறைவனின் நல்ல செய்திகளைப் பரப்பும் கருவிகளாக வாழும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.