2012-11-30 15:28:07

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஐ.நா. நடவடிக்கைக்குத் திருப்பீடம் வரவேற்பு


நவ.30,2012. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் “உறுப்பினரல்லாத பார்வையாளராகும் தகுதி” பாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அதேவேளை, அப்பகுதியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இந்த அங்கீகாரம் மட்டும் போதுமானதாக இல்லை என்று திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பாலஸ்தீனத்துக்கு இந்த அங்கீகாரம் வழங்குவது குறித்து இவ்வியாழனன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்தியா உட்பட 138 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
இந்த அங்கீகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடம், தனது நடுநிலைத் தன்மையை உறுதி செய்திருப்பதோடு, அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் பாலஸ்தீனப் பகுதிக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமாறும் கேட்டுள்ளது.
இஸ்ரேல், தனி நாடாகச் செயல்படுவதற்குரிய உரிமை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பன்னாட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியையும் பாதுகாப்பையும் அனுபவிக்கவும் அங்கீகாரம் பெற்றுள்ளது, இதேபோல் பாலஸ்தீனாவும் முழுமாண்புடன் இறையாண்மை கொண்ட தனிப்பட்ட நாடாக இயங்குவதற்கு அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும் திருப்பீடம் அறிக்கை கூறுகிறது.
பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக எல்லைகள் உள்பட பல பிரச்சனைகள் நிலவுகின்றன. யாசர் அராபத்தின் கடும் போராட்டத்துக்கு பிறகு பாலஸ்தீனம் தனி நாடானது. எனினும் ஐ.நா.வால் தனி நாடு தகுதி வழங்கப்படவில்லை. இதையடுத்து தனி நாடு அந்தஸ்து வழங்க கோரி தொடர்ந்து பாலஸ்தீனத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தை உறுப்பினரல்லாத பார்வையாளராகும் தகுதியை அங்கீகரித்து ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐ.நா.வில் மொத்தம் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இவற்றில், இந்தியா உள்பட 138 நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன. அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மற்ற நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டன.







All the contents on this site are copyrighted ©.