2012-11-30 15:32:32

ஐ.நா.நிறுவனங்கள் : எய்ட்ஸ் நோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்


நவ.30,2012. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளோர் பணி செய்யும் இடங்களில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது தவிர்க்கப்படுமாறு ஐ.நா.நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
டிசம்பர் முதல் தேதியன்று அனைத்துலக எய்ட்ஸ் நோய் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இவ்வாறு விண்ணப்பித்துள்ள அனைத்துலக தொழில் நிறுவன இயக்குனர் Guy Ryder, HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்பவர்கள் மாண்புடன் வாழவும், வேலை செய்யும் இடங்களில் வேறுபாடின்றி நடத்தப்படவும் அனைவரும் உழைக்குமாறு கேட்டுள்ளார்.
பாகுபாடற்ற சுதந்திரம், பணிசெய்வதற்கான அடிப்படையான உரிமை என்றுரைத்த Guy Ryder, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாகுபாடுகளைக் களைய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேலைசெய்யும் வயதுடையவர்களில் 3 கோடிக்கு மேற்பட்டோர் HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்கின்றனர் மற்றும் வேலை செய்யும் இளையோரில் 40 விழுக்காட்டுக்கு அதிகமானோர் ஆண்டுதோறும் புதிதாக இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர் என்று அனைத்துலக தொழில் நிறுவனம் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.