2012-11-29 15:38:50

இந்தியாவில் கத்தோலிக்க நலப்பணிகளால் 2 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுகின்றனர்


நவ.29,2012. மாறிவரும் உலகச் சூழலில் நலமற்றோருக்குத் திருஅவை ஆற்றும் பணிகளிலும் மாற்றங்கள் தேவை என்று பெங்களூரு பேராயர் Bernard Moras கூறினார்.
உரோம் நகரில் அண்மையில் நடைபெற்ற நலப்பணியாளர்கள் அகில உலகக் கருத்தரங்கில் இந்தியத் திருஅவையின் சார்பில் பங்கேற்றப் பேராயர் Moras, இந்தியாவுக்குத் திரும்பியபின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்விதம் கூறினார்.
"சவால்கள் நிறைந்த உலகில் கத்தோலிக்க மருத்துவமனைகளின் பணி" என்ற தலைப்பில் அகில உலகக் கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Moras, இந்தியாவில் கத்தோலிக்க மருத்துவமனைகள் ஆற்றிவரும் பணி போற்றுதற்குரியது என்று சுட்டிக் காட்டினார்.
இந்திய மக்கள்தொகையில் கத்தோலிக்கர்கள் 2 விழுக்காட்டினரே ஆயினும், இந்தியாவில் ஆற்றப்படும் நலப்பணிகளில் 20 விழுக்காடு, கத்தோலிக்கர்களால் செய்யப்படுகிறது என்று பேராயர் Moras சுட்டிக்காட்டினார்.
இந்திய கத்தோலிக்கத் திருஅவையால் நடத்தப்படும் நலவாழ்வு நிலையங்கள் 3300க்கும் அதிகமானது என்றும், இவற்றில் பணியாற்றும் 35,000க்கும் அதிகமான நலப்பணியாளர்கள் மூலம் 2 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பயன்பெறுகின்றனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.